கட்டுக்கடங்காத வேகத்தில் கொரோனா.. உடனே 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்துங்க.. அன்புமணி அதிரடி சரவெடி..!

By vinoth kumarFirst Published May 7, 2021, 11:35 AM IST
Highlights

முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்துவதைக் கட்டுப்படுத்தத் தவறினால், கொரோனா வைரஸ்  பரவல் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சென்று விடும். 

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் 2ம் அலை வேகமாக பரவி வருகிறது. கட்டுக்கடங்காமல் பெருகி வரும் வைரஸ் தொற்றுப் பரவலை தடுத்து நிறுத்துவதற்கு முழு ஊரடங்கு தான் ஒரே வழி என அன்புணி ராமதாஸ் கூறியுள்ளார்.

பாமக இளைஞரணி தலைவர் அன்புணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில்;- தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. கட்டுக்கடங்காமல் பெருகி வரும் வைரஸ் தொற்றுப் பரவலை தடுத்து நிறுத்துவதற்கு முழு ஊரடங்கு தான் ஒரே வழி எனும் நிலையில், அதை நடைமுறைப்படுத்த அரசு தயங்குவது மிகப்பெரிய கடமை தவறுதல் ஆகும். தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டும் 23,310 ஆகும். இவர்களையும் சேர்த்து தமிழ்நாட்டில் மொத்தம் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 311 பேர்  மருத்துவம் பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் முறைப்படி சோதனை நடத்தி அடையாளம் கண்டறியப்பட்டவர்கள் தான். சோதனை செய்யப்படாமல் கொரோனா தொற்றுடன் எந்தவித கட்டுப்பாடும்  இல்லாமல் நடமாடிக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை இன்னும் ஐந்து மடங்கு அதிகமாக இருக்கும் என்பது தான் ஒரு மருத்துவராக எனது மதிப்பீடு ஆகும். கொரோனா அவ்வளவு வேகமாக பரவிவருகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது ஒருபுறம்  இருக்க, கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. தினசரி உயிரிழப்புகளின் எண்ணிக்கை 150-ஐக் கடந்து விட்டது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மருத்துவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளில் 13 பேர் நேற்று ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்து விட்டனர். தமிழ்நாட்டில் சென்னை தொடங்கி அனைத்து நகரங்களிலும்  ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழப்பது சாதாரணமான ஒன்றாகி விட்டது. பெரும்பாலான உயிரிழப்புகள் உண்மையான காரணம் கூறப்படாமல் மூடி மறைக்கப்படுகின்றன. ரெம்டெசிவிர் மருந்து, ஆக்சிஜன் ஆகியவற்றுக்கு கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதற்கு காரணம் மருத்துவமனையில் மருத்துவம் பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது தான்.

கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தி, நோய் பாதிப்புடன் மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கையை குறைக்காமல் நிலைமையை முன்னேற்ற முடியாது. கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழி தமிழ்நாட்டில் முழு ஊரடங்கை அறிவித்து, அதை மிகக் கடுமையாக நடைமுறைப்படுத்துவது தான். முதலில் இரு வாரங்களுக்கு ஊரடங்கை நடைமுறைப்படுத்துவதன் மூலம் கொரோனா பரவல் சங்கிலியை அறுத்தெறிய முடியும். அதன்பின்னர் மேலும் ஒரு வாரத்திற்கு  முழு ஊரடங்கை நீட்டிப்பதன் மூலம் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முடியும். அதன்மூலம்  கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை படிப்படியாக குறைத்து ஆக்சிஜன் - ரெம்டெசிவிர் பற்றாக்குறையை போக்கி, உயிரிழப்புகளின் எண்ணிக்கையை ஒற்றை இலக்கத்திற்கு கொண்டுவரலாம்.

அதை செய்வதற்கு பதிலாக பகுதி நேர ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு, கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைப்பு போன்ற மேல்பூச்சு நடவடிக்கைகளால் எந்தப் பயனும் கிடைக்காது. பகுதி நேர ஊரடங்கால் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியாது என்பதை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் ரந்தீப் குலேரியா உறுதி செய்திருக்கிறார். இத்தகைய சூழலில் தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளால் கொரோனா பரவலைத் தடுக்க முடியாது. மற்றொருபுறம் மதுக்கடைகளில் மக்கள் கூடுவதால் கொரோனா பரவும், மது அருந்துவது நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து கொரோனா மிகவும் எளிதாக தாக்குவதற்கு  வழி வகுக்கும் என்று வல்லுனர்கள் எச்சரித்தும் கூட, மதுக்கடைகளை முழுமையாக மூடுவதற்கு பதிலாக வணிக நேரம் குறைப்பு என்ற பெயரில் பகல் 12.00 மணிக்கு திறக்கப்பட்டு வந்த டாஸ்மாக் மதுக்கடைகளை காலை 8.00 மணிக்கே திறப்பது குரூரமான நகைச்சுவை என்பதைத் தவிர வேறல்ல.

முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்துவதைக் கட்டுப்படுத்தத் தவறினால், கொரோனா வைரஸ்  பரவல் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சென்று விடும். அதனால் ஆக்சிஜன் பற்றாக்குறை, மருந்து பற்றாக்குறை அதிகரித்து நிலைமை மோசமாகி விடும். இப்போதே மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாத நிலையில், வட இந்திய மாநிலங்களில் காணப்படுவதைப் போன்று ஒரே படுக்கையில் மூன்று நோயாளிகள், மருத்துவமனைகளின் தாழ்வாரங்களில் வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை, தானிகள், அவரச ஊர்திகள், நடைபாதைகள் ஆகியவற்றிலும் நோயாளிகளை வைத்து மருத்துவம் அளிக்கும் நிலை ஏற்பட்டு விடும். கொரோனா நோயாளிகள் மட்டுமின்றி, பிற நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கும் சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டு விடும். அது உயிரிழப்புகளை இன்னும் அதிகரித்து விடும்.
முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்தினால் கடுமையான பொருளாதார இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. 

மக்களின் உயிர் முக்கியமா? பொருளாதாரம் முக்கியமா? என்று கேட்டால் உயிரிழப்புகளை தடுப்பதற்குத் தான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். 3 வாரங்கள் மட்டும் முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்துவதால், பெரிய அளவில் பொருளாதார இழப்பு ஏற்படாது. அதே நேரத்தில் முழு ஊரடங்கால் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை பெருமளவில் கட்டுப்படுத்த முடியும். அதேபோல், கொரோனா நோய்ப் பரவலையும் வெகுவாக கட்டுக்குள் கொண்டு வர முடியும்.


இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களில் இதை விட மிகவும் மோசமான சூழல் நிலவுவதால், நோய்த் தொற்று பரவலையும், உயிரிழப்புகளையும் கட்டுப்படுத்தும் வகையில் முதற்கட்டமாக 2 வாரங்கள், அடுத்து ஒரு வாரம் என மொத்தம் 3 வாரங்களுக்கு நாடு தழுவிய முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்த மத்திய அரசு ஆணையிட வேண்டும். ஒருவேளை மத்திய அரசு அதற்கு முன்வராவிட்டால், தமிழகத்தில்  அத்தகைய முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவிக்க வேண்டும். ஊரடங்கால் மக்களுக்கு ஏற்படும் வாழ்வாதார பாதிப்புகளை களைய ஒவ்வொரு குடும்பத்திற்கும் முதற்கட்டமாக ரூ. 5 ஆயிரம் நிதியுதவி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

click me!