இலவச பஸ் பாஸ் வேணாம்... உங்க வீட்டு வேலை பார்க்கிற எங்களை கட் பண்ணுங்க... டி.ஜி.பி.,யிடம் குமுறும் போலீஸார்.!

By Thiraviaraj RMFirst Published Jul 27, 2021, 1:17 PM IST
Highlights

உயரதிகாரிகள் இவ்வாறு அதிகார துஷ்பிரயோகம் செய்து சட்டத்தை மீறி செயல்படுவது போன்ற முறை தவறிய செயல்களை நிறுத்தி கொண்டாலே, தவறு செய்யும் சில காவலர்கள் நிச்சயம் தானாகவே திருந்தி விடுவார்கள். 

போலீஸ் பணியின்போது அரசு பஸ்களில் சீருடையுடன் சென்றால் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. மற்ற நேரங்களில் இலவசமாக பயணிக்கக்கூடாது என போலீஸாருக்கு டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதற்கு காவல்துறையினரிடையே கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. 

இதுகுறித்து காவல்துறையினர் கூறும்போது, ‘’போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு அரசு பல சலுகைகளை, கடைநிலை காவலர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக செல்லும்போது பேருந்துகளில் டிக்கெட் எடுத்து தான் செல்ல வேண்டும் என்பதை மனப்பூர்வமாக வரவேற்கிறோம்.

அதேபோல், தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான ஐ.பி.எஸ் அதிகாரிகள்( பணியில் இருப்பவர்கள் மட்டும் அல்லாது ஓய்வு பெற்றவர்களும்) அரசு ஊழியர்களான காவலர்களை, தங்களது அதிகார துஷ்பிரயோகத்தின் மூலமாக அவர்களின் குழந்தைகளை பராமரிப்பதற்கும், அவர்களின் வீட்டு வேலைகளை செய்வதற்க்கும், அவர்களது குடும்பத்தினருக்கு மட்டுமல்லாது குறிப்பிட்ட சில உயர்பதவியில் இருக்கும் ஐபிஎஸ் அதிகாரிகள் அவர்களுடைய மாமன், மச்சான், அண்ணன், தம்பி போன்றவர்களுக்கும் கூட அரசு வாகனத்தையும் வழங்கி, காவலர்களையும் ஓட்டுனர்கள் ஆக வேலை வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.

இதுபோன்ற காவலர் பணி அல்லாது ஐ.பி.எஸ் அதிகாரிகளின் சொந்த தேவைகளுக்காக காவலர்களை பயன்படுத்தும் செயல்களை நிறுத்தி அதில் ஈடுபட்டுள்ள காவலர்களை காவல் பணிக்கு திரும்ப செல்லுமாறு உத்தரவிட்டால் மிகவும் சிறப்பாக இருக்கும். "மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி"  என்பதைப்போல, உயரதிகாரிகள் இவ்வாறு அதிகார துஷ்பிரயோகம் செய்து சட்டத்தை மீறி செயல்படுவது போன்ற முறை தவறிய செயல்களை நிறுத்தி கொண்டாலே, தவறு செய்யும் சில காவலர்கள் நிச்சயம் தானாகவே திருந்தி விடுவார்கள்.    

இருசக்கர வாகனம் இல்லாத போலீசே கிடையாது. அரசு பேருந்தில் ஏறி பயணம் செய்து கிடைக்கிற அரை நாள் ஒய்வை இழக்க தயாரில்லாமல் தவணைக்கு வாங்கிய வாகனத்தில் அரசு தயவில்லாமல் செல்லும் நாங்கள் எங்கே? அரசு பங்களாக்கள், அரசு அலுவலகங்கள், அரசு ஆர்டர்லிகள், அரசு வாகனங்கள், அரசு எரிபொருட்கள், என எல்லாவற்றிற்கும் அரசை சார்ந்திருக்கும் உயர் வருவாய் பெரும் நீங்களெங்கே? நாங்கள் அரசு பஸ்ஸில் பயணம் செய்து அரை நூற்றாண்டு ஆகிவிட்டது. ஆனால் நீங்கள்..?  மனித உரிமை அமைப்பினர் கேட்பதால் பொங்கிய நீங்கள் கடமை எனும் பெயரில் காவல் துறையில் மீறப்பட்ட மீறப்படுகின்ற,  மனித உரிமைகள் பற்றி பேச மறுப்பதேன்? ஊமைகளாய், செவிடர்களாய், உணர்விழந்துவிட்ட காவல்துறையை மேலும் சிறுமைப்படுத்த அறிவித்த அறிவிப்பு இது. எல்லோராலும் எள்ளி நகையாகப்படுகிறது.

உயர்பதவியில் உள்ளோரும், ஓய்வு பெற்ற சிலரும் அரசு ஊழியர்களான போலீசாரை அதிகார துஷ்பிரயோகம் மூலம் வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்துன்றனர். பணியில்  உள்ளோர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாகனத்தை குடும்பத்தினருக்கு மட்டுமல்ல, உறவினர்களுக்கும் பயன்படுத்துகின்றனர். சந்தைக்கு செல்வதற்குக்கூட போலீஸ்வாகனத்தை பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கு அரசு நல்ல சம்பளம் தரும்போது இதுபோன்ற சலுகைகளை ரத்து செய்தால் அரசுக்கு நிதிச்சுமையும், போலீசாரின் பணிச்சுமையும் குறையும். அதிகாரிகளே தவறு செய்யும்போது நாம் செய்தால் என்ன என்ற எண்ணம் போலீசாருக்கு ஏற்படாது. முதலில் டி.ஜி.பி. இதனை செய்ய வேண்டும் ‘’ என்கிறார்கள்.

click me!