நெடுவாசலை விட்டு ஓட்டம் பிடித்த ஜெம் நிறுவனம்…..போராட்டத்துக்கு வெற்றி….கொண்டாட்டத்தில் பொது மக்கள்….

First Published May 10, 2018, 10:49 AM IST
Highlights
Neduvasal gem company run from that place success for tamil people


புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிடுவதாக ஜெம்  லேபரடரிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த ஓராண்டுக்கு மேலாக இதற்காக போராடி வரும் அப்பகுதி விவசாயிகளும், பொது மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்க உள்ளதாக மத்திய அரசு கடந்த  ஆண்டு பிப்ரவரி 15-ந்தேதி அறிவித்தது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பிப்ரவரி 16-ந்தேதி முதல் நெடு வாசலில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

இன்று வரை அங்கு போராட்டம் தொடர்ந்து  கொண்டிருக்கிறது. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும், தமிழக அரசும் இத்திட்டம் கொண்டுவரப்பட மாட்டாது என உறுதி மொழி அளித்தனர். இதற்கான உத்தரவாதத்தையும் அளித்தன்ர்.

ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாத மத்திய அரசு, தமிழ்நாட்டில் நெடுவாசல், புதுச்சேரியில் காரைக்கால் உள்பட இந்தியா முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க டெல்லியில் தாஜ் மான்சிங் எனும் நட்சத்திர ஓட்டலில்  கையெழுத்திட்டது.  

கர்நாடகாவைச் சேர்ந்த ஜெம் லேபரட்டரிஸ் நிறுவனம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் போட்டு அதற்கான வேலைகளைத் தொடங்கியது. இதனால் கடுப்பான நெடுவாசல் மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அதே நேரத்தில் பொது மக்களின் கடும் போராட்டத்தால் அந்த நிறுவனம் எந்த வேலையையும் நெடுவாசல் பகுதியில் தொடங்கவில்லை, இது தொடர்பாக அந்த நிறுவனம் தமிழக அரசுக்கு 10 கடிதங்களும், மத்திய அரசுக்கு மூன்று கடிதங்களும் எழுதின.

ஆனால் மத்திய-மாநில அரசுகள் மக்களின் எதிர்ப்பை சமாளிக்க முடியாது என்ற நிலை உருவானதால் ஜெம் நிறுனத்தின் கடிதங்களுக்கு பதில் அளிக்காமல் கிடப்பில் போட்டது.

இதையடுத்து தற்போது நெடுவாசலில் தாங்கள் மேற்கொள்ளவிருந்த திட்டத்தை கைவிடுவதாகவும், வேறு இடத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு ஜெம் நிறுவனம் கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நெடுவாசல் ஹைட் கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகம் முழுவதும் எதிர்கட்சிகளும், சமூக அமைப்புகளும், குறிப்பாக நெடுவாசல் பகுதியைச் சேர்ந்த பெண்களும், பொதுமக்களும், விவசாயிகளும் தொடர்ந்து நடத்தி வந்த போராட்டத்துக்கு தற்போது பெரு வெற்றி கிடைத்திருக்கிறது.

click me!