நீங்களே கிராம சபை கூட்டத்தில் கலந்துப்பீங்களோ... மு.க. ஸ்டாலின் மீது நெடுமாறன் அட்டாக்..!

By Asianet TamilFirst Published Oct 2, 2020, 9:03 PM IST
Highlights

திமுக தலைவர் ஸ்டாலின் கிராமசபை கூட்டங்களில் பங்கேற்றுப் பேசியது ஜனநாயக முறைகளை மதிக்காதப் போக்காகும். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2 அன்று கிராம சபை கூட்டம் நடத்துவது வழக்கம். கிராம சபை கூட்டங்களில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்றும்படி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் மாவட்டங்களில் இன்று நடக்க இருந்த கிராம சபை கூட்டங்களை மாவட்ட ஆட்சியர்கள் ரத்து செய்தனர். ஆனால், தடையை மீறி இன்று பல இடங்களில் திமுகவினர் கிராம சபை கூட்டங்களை நடத்தினர். திருவள்ளூரில் அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றார்.

 
இந்நிலையில், கிராம சபை கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பங்கேற்றதற்கு தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில், “தமிழ் நாட்டில் ஆண்டுதோறும் காந்தியடிகள் பிறந்தநாளான அக்டோபர் 2-ம் தேதி அன்று கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும். கிராமத்தில் உள்ள அனைத்து மக்களும் ஒன்றாகக் கூடி ஊராட்சி மன்றத்தின் செயல்பாடுகள் மற்றும் மக்களின் பிரச்சனைகள் குறித்து, விவாதித்து முடிவுகள் எடுக்கப்படுவது வழக்கம். இக்கூட்டங்களில் வெளியாட்கள் பங்கேற்றால் கூட்டத்தின் நோக்கமே சிதைந்து போகும்.


இந்த மரபை மீறும் வகையில், திமுக தலைவர் ஸ்டாலின் கிராமசபை கூட்டங்களில் பங்கேற்றுப் பேசியது ஜனநாயக முறைகளை மதிக்காதப் போக்காகும். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இவ்வாண்டு கொரோனா தொற்று நோய் காரணமாக கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்க ஸ்டாலின் விரும்பினால், தனது கட்சிக்காரர்களுடன் தனியே ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்க வேண்டுமே தவிர, கிராம சபை கூட்டங்களில் பங்கேற்றுயிருப்பது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும்.” என்று அறிக்கையில் நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

click me!