
அதிமுக பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட எம்பி நவநீதகிருஷ்ணன், முதல்வரின் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றுள்ளார். உங்களில் ஒருவன் மு.க.ஸ்டாலின் எழுதிய நூலை ராகுல்காந்தி வெளியிட்டார். முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள உங்களில் ஒருவன் நூலில் அவரது பள்ளி, கல்லூரி படிப்பு காலம், இளமை காலம், அரசியல் ஆர்வம், முதல் அரசியல் பொதுக்கூட்டம், அந்த கால கட்டத்தில் அவர் பொதுக்கூட்டங்களில் பேசியது, தமிழ் சினிமாவில் அவர் நடித்தது, திருமண வாழ்க்கை, மிசா காலத்தில் பட்ட கஷ்டங்கள் என 1953 மார்ச் 1ம் தேதி அவர் பிறந்தது முதல் 1976ம் ஆண்டு வரையிலான 23 ஆண்டு கால வாழ்க்கை வரலாற்றை ‘உங்களில் ஒருவன் புத்தகத்தில் தனது சுயசரிதையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ளார். குறிப்பாக 1976ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி மிசா சட்டத்தில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட சம்பவங்கள் குறித்தும் இந்த நூலில் அவர் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் மு.க.ஸ்டாலின் சிறு வயது எண்ணங்கள், கலைஞரின் அன்பில் திளைத்த தருணங்கள், அரைக்கால் சட்டை பருவத்தில் திமுக கொடியேந்தி கழகத்திற்காக பணியாற்றிய தருணம் உள்ளிட்ட அனுபவங்களை அவர் கூறி உள்ளார். இந்த நூலின் முதல் பாகம் இன்று மாலை வெளியிடப்பட்டது. சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற முதலமைச்சரின் உங்களில் ஒருவன் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. உங்களில் ஒருவன் புத்தகத்தின் முதல் பிரதியை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளியிட, அமைச்சர் துரை முருகன் பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில், முதல்வர் பினராயி விஜயன், ஜம்மு -காஷ்மீர் முன்னாள் முதல்வர், பீகார் எதிர்க்கட்சி தலைவர், வைரமுத்து, நடிகர் சத்யராஜ், அமைச்சர்கள், எம்பிக்கள், திமுக தோழமை கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் இதில் அதிமுக பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட எம்பி நவநீதகிருஷ்ணன், பங்கேற்றுள்ளார். இவர் திமுக எம்.பி. டி.கே.எஸ் இளங்கோவன் மகள் திருமண நிகழ்ச்சியில்நாடாளுமன்ற நிகழ்வுகள் எப்படி நடைபெறும் என்பதை கனிமொழி தனக்குக் கற்றுக் கொடுத்ததாக புகழ்ந்து பேசி இருந்தார். இதை அடுத்து அதிமுக கட்சி பொறுப்பில் இருந்து நவநீதகிருஷ்ணன் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.