அதிமுகவில் மீண்டும் அக்னிப்பரிட்சை... வெற்றிபெறப்போவது ஓ.பி.எஸா..? எடப்பாடி பழனிசாமியா..?

By Thiraviaraj RM  |  First Published Aug 6, 2021, 10:39 AM IST

அதிமுக அவைத் தலைவர் பதவிக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளரையும் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளரையும் கொண்டுவர முயற்சிப்பார்கள் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


அதிமுக அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் மறைந்ததை அடுத்து அந்தப்பதவிக்கு ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளரையும், எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளரையும் கொண்டுவர முயற்சிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

அதிமுக பொதுச் செயலாளராக ஜெயலலிதா இருந்தபோது, அவருடைய ஆதரவுடன் பிப்ரவரி 5, 2007ல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் மதுசூதனன் அவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதிமுகவில் பொதுச் செயலாளருக்கு அடுத்து மிக முக்கியமான பொறுப்பு இது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் இருந்து வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியில் இருந்த காலத்தில் தன்னை முதல்வராகவும் கட்சி தலைமையாகவும் நிரூபித்துள்ளார். அதே நேரத்தில், ஓ.பன்னீர்செல்வமும் அதிமுகவில் தனது பிடியை வலியுறுத்தியபடியே இருந்து வருகிறார்.

Tap to resize

Latest Videos

தேர்தலுக்கு பிறகு, சட்டமன்ற எதிர்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி, கொறடா உள்ளிட்ட பதவிகளை தனது ஆதரவாளர்களுக்கே அளிக்க முயற்சி செய்து வெற்றியும் பெற்றார். இந்த சூழ்நிலையில்தான், அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த மதுசூதனன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மதுசூதனன் மறைவு அதிமுகவுக்கு பேரிழப்பு என்பதால் அதிமுக தொண்டர்களும் இரட்டை தலைமையும் அதிர்ச்சியில் இருந்தாலும் அதிமுகவின் அடுத்த அவைத் தலைவர் யார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

அதிமுக அவைத் தலைவர் பதவிக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளரையும் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளரையும் கொண்டுவர முயற்சிப்பார்கள் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவின் அடுத்த அவைத் தலைவர் பதவிக்கு நத்தம் விஸ்வநாதன் கொண்டுவர முயற்சிப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே போல, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் அடுத்த அவைத் தலைவராக முன்னள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அல்லது செங்கோட்டையனை கொண்டுவர முயற்சிப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே, கட்சியில் தனது பிடியை உறுதிசெய்துள்ள இபிஎஸ், புதிய அவைத் தலைவர் நியமனத்திலும் உறுதி செய்வார் என்று வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன. 

click me!