
அதிமுக, இரட்டை இலை எல்லாமே தங்களுக்குத்தான் சொந்தம் எனக்கூறும் பழனிசாமியும் பன்னீர்செல்வமும் மேடையில் என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா என புதிய பார்வை இதழின் ஆசிரியர் நடராஜன் சவால் விடுத்துள்ளார்.
சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின்னர் உடல்நலம் குணமாகிய பிறகு, புதிய பார்வை இதழின் ஆசிரியரும் சசிகலாவின் கணவருமான நடராஜன், தனியார் பண்பலை ஒன்றிற்கு பேட்டியளித்தார்.
அதில், ஆர்.கே.நகர் தேர்தல் களத்தை நான் உற்றுநோக்கவில்லை. எனினும் பொதுவாக இடைத்தேர்தல்களில் ஆட்சியாளர்களுக்கு ஆதரவாகவே மக்கள் வாக்களிப்பர். அப்போதுதான் தொகுதிக்கு நன்மை நடக்கும் என்ற நம்பிக்கையில், இடைத்தேர்தலில் ஆட்சியாளர்களை ஆதரிப்பதுதான் வழக்கம். அதுதான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் நடக்கும் என்பது எனது அனுமானம். ஆனால், அவர்கள் வெற்றி பெறுவார்களா என்றால், அதை உறுதியாக சொல்ல முடியாது. தேர்தல் முடிந்தபிறகுதான் தெரியும்.
எம்ஜிஆருக்குப் பிறகு கஷ்டப்பட்டு இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுத்தது நாங்கள் தான். ஆனால் எந்த கஷ்டத்தையும் அனுபவிக்காதவர்கள், தற்போது கட்சியும் சின்னமும் தங்களுக்குத்தான் என்றும் தாங்கள் தான் எல்லாம் என்றும் கூக்குரலிடுகின்றனர். பன்னீர்செல்வத்திற்கும் பழனிசாமிக்கும் நான் ஒரு சவால் விடுக்கிறேன். எந்த மேடையிலாவது என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க அவர்கள் தயாரா? என்னை அவர்களால் எதிர்கொள்ள முடியுமா..? என முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு நடராஜன் சவால் விடுத்துள்ளார்.