
பழனிசாமியும் பன்னீர்செல்வமும் ஆர்.கே.நகரில் குட்டிக்கரணம் அடித்தாலும் கீழே விழுந்து புரண்டாலும் அதிமுக டெபாசிட் கூட வாங்க முடியாது என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு கடந்த ஓராண்டாக காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. திமுக, அதிமுக, தினகரன் ஆகிய மூன்று தரப்பும் தங்களின் வலிமையை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நிரூபிக்க போராடுவதால், இதுவரையிலான தேர்தல்களை விட ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அதிமுகவின் ஓட்டு வங்கி இரண்டாகப் பிரிவது, திமுகவிற்கு சாதகமாக அமையும் என்ற நம்பிக்கையில் திமுக உள்ளது.
இந்நிலையில் சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், எந்த திட்டங்களை அறிவித்தாலும் ஆர்.கே.நகரில் அதிமுக வெற்றி பெற முடியாது என தெரிவித்தார். ஆர்.கே.நகரில் பழனிசாமியும் பன்னீர்செல்வமும் குட்டிக்கரணம் அடித்தாலும் கீழே விழுந்து புரண்டாலும் அதிமுக டெபாசிட் கூட வாங்க முடியாது என ஸ்டாலின் விமர்சித்தார்.