மெஜாரிட்டியை இழந்த நாராயணசாமி.. ஒரு நிமிடம் கூட ஆட்சியில் இருக்க அருகதை இல்லை... அதிமுக எம்.எல்.ஏ காட்டம்..!

By vinoth kumarFirst Published Feb 16, 2021, 12:47 PM IST
Highlights

ஒரு நிமிடம் கூட ஆட்சியில் நீடிப்பதற்கு அருகதை இல்லை. நாராயணசாமிக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருக்காது. நம்பிக்கையிருக்கும் யாராக இருந்தாலும் இந்த சூழலில் பதவியில் இருக்க மாட்டார்கள். 


 புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சட்டப்பேரவையில் பெருபான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் என அதிமுக எம்.எல்.ஏ அன்பழகன் கூறியுள்ளார். 

புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது. சட்டப்பேரவையில் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 30. தனவேலு தகுதி நீக்கம், நமச்சிவாயம் மற்றும் தீப்பாய்ந்தான் ராஜினாமாவை தொடர்ந்து, புதுச்சேரி சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு தற்போது 12 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். கூட்டணி கட்சியான திமுகவுக்கு 3 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். மாகியை சேர்ந்த சுயேச்சை எம்.எல்.ஏ.வின் ஆதரவும் ஆட்சிக்கு உள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மற்றொரு எம்.எல்.ஏ.வான ஜான்குமார் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் வழங்கினார். இதனால், சட்டப்பேரவையில் ஆளுங்கட்சியின் பலம் 14ஆக குறைந்துள்ளது. எதிர்க்கட்சி வரிசையில் என்.ஆர்.காங்கிரஸ்  7, அதிமுக- 4, பாஜக - 3 என மொத்தம் 14 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இதனால், இரு தரப்பும் சம பலம் உள்ளது. இதனால், நாராயணசாமிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையல், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் முதல்வர் நாராயணசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இதனிடையே, அமைச்சர் கந்தசாமி கூறுகையில்;- புதுச்சேரி அமைச்சர்கள் அனைவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளனர். ஆட்சியை கவிழ்க்க திட்டமிடுவதால் அமைச்சரவையை நாங்களாகவே கலைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளோம் என தகவல் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், புதுச்சேரி அதிமுக எம்.எல்.ஏ அன்பழகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தார்மீகப் பொறுப்பேற்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ஒரு நிமிடம் கூட ஆட்சியில் நீடிப்பதற்கு அருகதை இல்லை. நாராயணசாமிக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருக்காது. நம்பிக்கையிருக்கும் யாராக இருந்தாலும் இந்த சூழலில் பதவியில் இருக்க மாட்டார்கள். பதவி விலகிவிடுவார்கள். இப்பொழுதும் ராஜினாமா செய்யவில்லையென்றால் சுயநல சிந்தனை உள்ளவர்கள் காங்கிரஸ், திமுக மாதிரி யாரும் இல்லை என்றார்.

click me!