
மத்திய அரசு இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்யக்கூடாது என சட்ட வரைவு கொண்டு வந்தது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர் என அனைத்து தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பல இடங்களில் மாட்டிறைச்சி உணவு தயாரித்து, பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. சில இடங்களில் மாட்டிறைச்சி விருந்து ஏற்பாடும் செய்யப்பட்டு நடந்து வருகிறது. ஆனால், மத்திய அரசு இதற்கான தடை உத்தரவை இதுவரை பிறப்பிக்க வில்லை.
இந்நிலையில், மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து புதுச்சேரியில் தனிச்சட்டம் இயற்றப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி புறப்பட்டு சென்றார். அப்போது, விமான நிலையத்தில் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவில் 40 சதவீதத்துக்கு மேற்பட்டோர் மாட்டு இறைச்சியை சாப்பிடுகிறார்கள். இதை தடுப்பதற்கு மத்திய அரசுக்கு உரிமை கிடையாது. உணவு என்பது அவரவரது விருப்பம். இதைதான் சாப்பிட வேண்டும் என யாருக்கும் உத்தரவிட முடியாது. தனிமனித சுதந்திரத்தில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை.
மத்திய அரசு மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாத பல திட்டங்களை திணித்து வருகிறது. மாட்டிறைச்சி தடைக்கு எதிராக புதுச்சேரியில் தனி சட்டம் கொண்டு வருவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.