நாராயணசாமி தர்ணா தற்காலிக வாபஸ் !! 6 நாட்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது !!

By Selvanayagam PFirst Published Feb 19, 2019, 7:45 AM IST
Highlights

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கடந்த 6 நாட்களாக நடத்தி வந்த தர்ணா போராட்டம் நேற்று இரவு முடிவுக்கு வந்தது. பிரச்சனைகளை பேசித் தீர்ப்பதாக கிரண் பேடி ? நாராயணசாமி இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

புதுச்சேரி முதலமைச்சர்  நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் கவர்னரை கண்டித்து கடந்த 13-ந் தேதி முதல் கவர்னர் மாளிகை முன்பு தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டம் தொடங்கிய மறுநாள் கவர்னர் திடீரென டெல்லி புறப்பட்டு சென்று விட்டார்.

6 நாட்கள் அவர் டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு 20-ந் தேதி தான் புதுவை திரும்புவதாக இருந்தது. ஆனால் புதுவையில் போராட்டம் நடந்து கொண்டு இருக்கும் சூழ்நிலையில் கவர்னர் ஊரில் இல்லாமல் இருப்பது கடும் விமர்சனத்துக்குள்ளானது. 

போராட்டமும் தீவிரமடைந்து நிலைமை மோசமடைந்தது. எனவே, கவர்னர் கிரண்பேடி தனது டெல்லி நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு நேற்று புதுவை திரும்பினார். நேற்று பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதலமைச்சரின் நிபந்தனைகளை கவர்னர் ஏற்க மறுத்ததால், பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை.

முதல்வர் மற்றும் அமைச்சர்களின் தர்ணா போராட்டம் 6-வது நாளாக  தொடரும் நிலையில், நேற்று  மாலை 5 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்த ஆளுநர் மாளிகைக்கு வரும்படி முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்களுக்கு கவர்னர் கிரண் பேடி அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில் நேற்று  மாலை நடைபெற்ற பேச்சு வார்த்தையின் முடிவில் முதலமைச்சர்  நாராயணசாமி  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 39 கோரிக்கைகளில் முக்கிய விவகாரங்கள் குறித்து ஆளுநருடன் ஆலோசிக்கப்பட்டதாகவும், அதில் தெரிவித்த கோரிக்கைகளை பரிசீலிப்பதாக துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புக்கொண்டார் என தெரிவித்தார்.  

மேலும்  ஓய்வூதியம், இலவச அரிசி, காவல்துறையில் பணியாளர் நியமனம் ஆகிய கோரிக்கைகளை ஆளுநர் அவர்கள் ஏற்றுக் கொண்டதாக  நாராயணசாமி தெரிவித்தார்.   மேலும் அதிகாரங்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் தீர்ப்பு வரும் வரை பொருத்திருப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

இதன் மூலம் 6 நாட்களாக நடத்தி வந்த தர்ணா போராட்டம் வாபஸ் பெறுவதாக நாராயணசாமி தெரிவித்தார். இந்த போராட்டத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாகவும் அவர் கூறினார்.

click me!