பாமக எந்தக் கூட்டணியில் ? திமுகவுடன் சேரப் போவதாக வந்த தகவலால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு !!

By Selvanayagam PFirst Published Feb 19, 2019, 7:04 AM IST
Highlights

அதிமுக கூட்டணியில் பாமக இணைய உள்ளதாகவும், இன்று சென்னை வரும் பாஜக தலைவர் அமித்ஷாவை ராமதாசும், அன்புமணி ராமதாசும் சந்தித்து இதை உறுதிப்படுத்துவார்கள் என  தகவல் வெளியான நிலையில் நேற்றிரவு பாமக திமுக கூட்டணியில் சேர உள்ளதாக செய்தி பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் வெளியாக உள்ளது. இந்த தேர்தலை சந்திக்கவும், கூட்டணி அமைப்பதிலும் அரசியல் கட்சிகள் மிக தீவிரமாக இறங்கி உள்ளன. யார் யாருடன் இணைய போகிறார்கள்? என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் களத்தை பற்றிக்கொண்டுள்ளது. 

தமிழகத்தின் ஆளும் கட்சியான அதிமுக தனது கூட்டணிக்கான வளையத்தை பெரிதாக்கி இருக்கிறது. முதல் கட்டமாக அதிமுக - பாஜக கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. தேமுதிக,பாமக, தமாகா ஆகிய கட்சிகளுடன் அதிமுக  மறைமுக பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. கூட்டணிக்கான பேச்சுவார்த்தையுடன், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையும் சேர்ந்தே நடந்து வருகிறது.

அ.தி.மு.க. கூட்டணியில் அ.தி.மு.க. தனக்கு 25 தொகுதிகளை எடுத்துக்கொண்டு, பா.ஜ.க.வுக்கு 8 தொகுதிகளும், பா.ம.க.வுக்கு 4 தொகுதிகளும், தே.மு.தி.க.வுக்கு 2 தொகுதிகளும், த.மா.கா.வுக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்படுவதற்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.

தே.மு.தி.க., பா.ம.க. இடையே தொகுதி எண்ணிக்கையிலும், தொகுதிகள் அடையாளம் காண்பதிலும் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது. கொங்கு மண்டல இடங்களை பிரிப்பதில் அ.தி.மு.க.-பா.ஜ.க. இடையே உடன்பாடு ஏற்படவில்லை என்று தெரிகிறது.

இந்தநிலையில், தி.மு.க.வுடனும் பா.ம.க. பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மிக ரகசியமான முறையில் மறைமுக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் உள்ளன.

அ.தி.மு.க., தி.மு.க. என மாறி, மாறி கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள பா.ம.க. தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இதனால் பா.ம.க. முடிவை பொறுத்து கூட்டணியை இறுதி செய்ய அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் நினைக்கிறது. இதனால் தான் இரு அணிகளிலும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவுக்கு வரவில்லை என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். 

இந்த சூழ்நிலையில் அதிமுக-பாஜக கூட்டணியை உறுதி சென்னை வரும் பாஜக தலைவர் அமித்ஷாவை ராமதாஸ் மற்றும் அனபுமணி ராமதாஸ் ஆகியோர் சந்திக்க உள்ளதாகவும். இன்று அதிமுகவுடன் கூட்டணி என்பதை உறுதி செய்ய உள்ளதாகவும் நேற்று மாலை தகவல் வெளியானது.
இந்நிலையில் நேற்று இரவு திடீரென அன்புமணி ராமதாஸ் திமுக  நிர்வாககிள் சிலரை சந்தித்தாகவும், பாமக, திமுக கூட்டணியில்  சேர உள்ளதாகவும் தகவல் வெளியானது.

இதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாமக தொண்டர்களும் எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பதை அறியமுடியாமல் அதிருப்தி அடைந்துள்ளனர்.

click me!