சட்டம் ஒழுங்கு சீர்குலைவதை அரசும், காவல்துறையும் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது... நாராயணன் திருப்பதி கண்டனம்!!

By Narendran S  |  First Published May 1, 2023, 11:51 PM IST

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவதை தமிழக அரசும், காவல் துறையும் கைகட்டி வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதாக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவதை தமிழக அரசும், காவல் துறையும் கைகட்டி வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதாக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருக்கழுக்குன்றத்தில் நடு ரோட்டில் சர்புதீன் என்பவரை காட்டுமிராண்டி கும்பல் ஒன்று வெட்டி படுகொலை செய்துள்ளது. திருக்கழுக்குன்றம் தி.மு.க. கவுன்சிலர் குடும்பம் இதன் பின்னணியில் உள்ளதாக சொல்லப்படுகிறது. அரசு நிலங்களை ஆக்கிரமிப்பது, ரியல் எஸ்டேட் அராஜகம், கட்ட பஞ்சாயத்து என தொடர்ந்து சட்ட விரோத செயல்களை செய்து வரும் தி.மு.கவைச் சேர்ந்த கவுன்சிலர் ஒருவரின் குடும்ப அராஜகங்களை தட்டி கேட்டதோடு, இவர்களுக்கு எதிராக சர்புதீன் வழக்கு தொடர்ந்த காரணத்தினால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரிய வருகிறது.

இதையும் படிங்க: கர்நாடகாவில் காங்கிரஸ் நிச்சயம் ஆட்சிக்கு வராது.. அமித்ஷா திட்டவட்டம்..

Latest Videos

கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த கும்பலை தட்டி கேட்ட பா.ஜ.க-வை சேர்ந்த தனசேகரை படுகொலை செய்ய முயற்சித்து கொலை வெறி தாக்குதலை அரங்கேற்றியதும் குறிப்பிடத்தக்கது. பல நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று கொண்டிருக்கிற, பொது மக்கள் முன்னிலையில் நடுரோட்டில் நடைபெற்றுள்ள இந்த படுகொலை, தங்களை கேட்க யாரும் இல்லை என்ற அகம்பாவத்தில், அதிகார மமதையில் அரங்கேற்றப்பட்டிருக்கிற கொடூர சம்பவமாகும். ஏற்கனவே, இது போன்ற அராஜகங்களை அறிந்தும் காவல்துறை உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே இந்த குரூர கொலை நடந்ததற்கு காரணம். தங்களை யாராலும் எதுவும் செய்ய முடியாது' என்ற ஆளும் கட்சியினரின் மமதையை, அதிகார பலத்தை இது வெளிப்படுத்துகிறது. திமுக-வின் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதற்கு காரணமாக அமைவதை தமிழக அரசும், காவல் துறையும் கைகட்டி வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

இதையும் படிங்க: கர்நாடக தேர்தல் : இடஒதுக்கீடு நடவடிக்கை பாஜகவுக்கு சாதகமாக இருக்கலாம்.. NDTV கருத்துக்கணிப்பில் தகவல்..

திட்டமிட்ட இந்த படுகொலை குறித்து நுண்ணறிவு பிரிவு எச்சரிக்கை செய்யாமல் இருந்திருந்தால், அது அப்பிரிவின் தோல்வியை வெளிப்படுத்துகிறது. எச்சரித்திருந்தால் சட்டம் ஒழுங்கு பிரிவின் தோல்வியை பறை சாற்றுகிறது. திமுக கவுன்சிலர்களால் எப்போது எது நடக்குமோ என்ற அச்சத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் தமிழக மக்கள். ஆளும் கட்சியினரின் ஆணவத்தால், ஆளும் கட்சியின் அதிகார பலத்தால், ஆளும் கட்சியினரின் பேராசையால் நாசமாகிக் கொண்டிருக்கிறது தமிழகம். சமூக விரோதிகளை, கொலை வெறிபிடித்த நபர்களை, ரௌடிகளை, கட்ட பஞ்சாயத்துநபர்களை, சட்ட விரோத தீய சக்திகளை தமிழகத்தில் அரசியல் கட்சிகள் அங்கீகரிப்பது தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில், காவல்துறை இது போன்ற தீய சக்திகளை உலவ விடுவது பெரும் கேடுவிளைவிக்கும் என்று தெரிவித்துள்ளார். 

click me!