கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வராது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று ஷிமோகாவில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் மக்களிடையே உரையாற்றிய அவர், கர்நாடக மாநிலத்தில் இரட்டை இயந்திர ஆட்சி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் "காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு தருவோம் என்று சொல்கிறது. யாருடைய இடஒதுக்கீட்டை பறிப்பார்கள் என்று டி.கே.சிவகுமாரிடம் கேட்க விரும்புகிறேன். ஆனால், கவலைப்படத் தேவையில்லை. ஏனென்றால் காங்கிரஸும் ஆட்சிக்கு வராது. அவர்கள் அத்தகைய முடிவை எடுக்க முடியாது..” என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க : டெல்லியில் போராடி வரும் மல்யுத்த வீரர்கள்... ஆதரவு தெரிவித்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!!
முன்னதாக ஆளும் பாஜக இன்று, கர்நாடகா சட்டமன்றத் தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. பாஜகவின் தேசியத் தலைவர் ஜேபி நட்டா, முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் அவரது முன்னோடியும் லிங்காயத் பிரமுகருமான பிஎஸ் எடியூரப்பா முன்னிலையில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை பாஜக வெளியிட்டது. ஆண்டுதோறும் அனைத்து வறுமை நிலைக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கும் 3 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
பாஜக தனது தேர்தல் அறிக்கையில் சத்துணவு திட்டத்தை தொடங்குவதாக உறுதியளித்துள்ளது, இதன் மூலம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் தினமும் அரை லிட்டர் நந்தினி பால் மற்றும் 5 கிலோ சிறுதானியங்கள் கிடைக்கும் என்றும் உறுதியளித்துள்ளது.
224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 10-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.மே 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்று பாஜகவும், மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் களத்தில் உள்ளதால் அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : அடுத்த 2 நாட்களுக்கு கனமழை தொடரும்.. எந்தெந்த பகுதிகளில் தெரியுமா..?