இந்த விவகாரத்தில் யாரும் ஆளுநரை விமர்சிக்கக்கூடாது என்று கட்சியினருக்கு அறிவுறுத்திய முதல்வர் ஸ்டாலினே ஆத்திரப்பட்டு தமிழ்நாடு என்று சொல்லக்கூடாது என ஒருத்தன் புலம்பிட்டு இருக்கானே என்று ஆளுநரை ஒருமையில் ஆவேசமாக பேசியிருக்கிறார்.
முதல்வரை ஆதரிக்க முடியாது என திமுக எம்.பி. கனிமொழி தைரியமாக சொல்லியிருப்பதற்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி எப்போது நியமிக்கப்பட்டாரோ அன்று முதல் தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் நடைபெற்றது. தனது உரையை வாசிக்க தொடங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு, அமைதிப்பூங்கா, சமூகநீதி, சுயமரியாதை, பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், திராவிட மாடல் ஆட்சி ஆகிய வார்த்தைகளை தவிர்த்து விட்டு அடுத்த பக்கங்களுக்கு சென்றார்.
இதனையடுத்து ஆளுநர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு தயாரித்த உரை மட்டுமே அவைக் குறிப்பில் இடம் பெறும் என அறிவித்தார். இதையடுத்து, ஆளுநர் உடனடியாக வெளிநடப்பு செய்தார். ஆளுநரின் இந்த செயலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என கூறிவந்தனர். சமீபத்தில் விருகம்பாக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆளுநரை மிக கடுமையான சொற்களால் விமர்சித்திருந்தார்.
இதற்கிடையில் இந்த விவகாரத்தில் யாரும் ஆளுநரை விமர்சிக்கக்கூடாது என்று கட்சியினருக்கு அறிவுறுத்திய முதல்வர் ஸ்டாலினே ஆத்திரப்பட்டு தமிழ்நாடு என்று சொல்லக்கூடாது என ஒருத்தன் புலம்பிட்டு இருக்கானே என்று ஆளுநரை ஒருமையில் ஆவேசமாக பேசியிருக்கிறார். இதுகுறித்து பாஜக நாராயணன் திருப்பதி விமர்சித்த போது முதல்வராக இருக்கும் தகுதியை ஸ்டாலின் இழந்துவிட்டார் என கூறினார்.
மரியாதைக் குறைவாக பேசுபவர்களை தி மு க ஆதரிக்காது, ஊக்குவிக்காது -
ஆளுநரை மரியாதைக் குறைவாக பேசிய முதல்வர் அவர்களை ஆதரிக்க முடியாது, ஊக்குவிக்க முடியாது என்று தைரியமாக சொல்கிறாரே! சிறப்பு!
இந்நிலையில், தமிழக பாஜக மாநிலத் துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- மரியாதைக் குறைவாக பேசுபவர்களை திமுக ஆதரிக்காது, ஊக்குவிக்காது என கனிமொழி கூறியிருப்பதற்கு ஆளுநரை மரியாதைக் குறைவாக பேசிய முதல்வர் ஸ்டாலினை ஆதரிக்க முடியாது ஊக்குவிக்க முடியாது என்று தைரியமாக சொல்கிறாரே! சிறப்பு! என நாராயணன் திருப்பதி பாராட்டி உள்ளார்.