
சுயேட்சை வேட்பாளர் தானே என தினகரனை கொச்சைப்படுத்தியவர்களுக்கு அவர்தான் சுயம்பு என்பதை ஆர்.கே.நகர் மக்கள் வாக்கின் மூலம் நிரூபித்துவிட்டனர் என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை 40707 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தினகரன் அபார வெற்றி பெற்றார். இதையடுத்து பழனிசாமி-பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு அளித்துவரும் சில அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் தினகரன் பக்கம் வந்துவிடக்கூடிய சூழல் உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்த தகவலால் கலக்கத்தில் இருக்கும் பழனிசாமி-பன்னீர்செல்வம், அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தை நேற்று கூட்டினர். அதில், தினகரன் கூறும் ஸ்லீப்பர் செல்கள் யார் என்பது தொடர்பாகவும் ஆர்.கே.நகர் தோல்விக்கான காரணம் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய பழனிசாமியும் பன்னீர்செல்வமும் துரோகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
இதையடுத்து அதிமுகவின் கட்சி பொறுப்பில் இருக்கும் தினகரன் ஆதரவாளர்களான நாஞ்சில் சம்பத், புகழேந்தி, சி.ஆர்.சரஸ்வதி, கலைராஜன் உள்ளிட்டோரை கட்சி பொறுப்புகளிலிருந்து நீக்கியதோடு அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கினர். கட்சிக்கு துரோகம் இழைத்துவிட்டதால் அவர்களை கட்சியிலிருந்து நீக்கியதாக காரணம் கூறப்பட்டது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத், கட்சிக்கு துரோகம் இழைத்துவிட்டதாக கூறி எங்களை கட்சியிலிருந்து நீக்கியுள்ளனர். கட்சிக்கு துரோகம் இழைத்தவர்களை கட்சியிலிருந்து நீக்குவதென்றால், முதலில் பன்னீர்செல்வத்தையும் அவரது ஆதரவாளர்களையும்தான் கட்சியிலிருந்து நீக்கியிருக்க வேண்டும். சசிகலாவையும் தினகரனையும் என்றைக்கு கட்சியிலிருந்து ஒதுங்கியிருக்குமாறு கூறினார்களே அன்றே அவர்களை நாங்கள் கட்சியிலிருந்து நீக்கிவிட்டோம். அப்படியிருக்கையில், அவர்கள் எப்படி எங்களை கட்சியிலிருந்து நீக்குவார்கள்? என கேள்வியெழுப்பினார்.
ஆர்.கே.நகரில் போட்டியிடும்போது தினகரனை சுயேட்சை வேட்பாளர்தானே என அலட்சியாக கொச்சைப்படுத்தினார்கள். ஆனால் தினகரன் தான் சுயம்பு என்பதை ஆர்.கே.நகர் மக்கள் நிரூபித்துவிட்டனர். இந்தியாவை ஆள்பவர்களும்(பாஜக) இன்ப தமிழ்நாட்டை ஆள்பவர்களும்(அதிமுக) இன்ப தமிழ்நாட்டை ஆள துடிப்பவர்களும்(திமுக) தினகரனின் வெற்றி குக்கரில் வெந்து தணிந்திருக்கிறார்கள் என நாஞ்சில் சம்பத் விமர்சித்தார்.