
டி.டி.வி. தினகரன் கைது செய்யப்பட்டதை கண்டித்து சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் அ.தி.மு.க. அம்மா அணி சார்பில்,பொதுக்கூட்டம் நடந்தது. அதில், கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் பேசியதாவது:-
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களில் கலந்து கொண்டார். அப்போது, அவர் தனக்கு உடல்நிலை சரியில்லை என்பதை வெளிக்காட்டவில்லை. தான் சோர்ந்து விட்டால் தொண்டர்களும் துவண்டு விடுவார்கள் என கருதி எப்போதும் உற்சாகமாக காணப்பட்டார்.
ஓ.பன்னீர்செல்வத்துக்கு மருத்துவத்தை பற்றி என்ன தெரியும்? அவருக்கு ஜெயலலிதா மறைவின் மர்மத்தை கேட்க என்ன அருகதை உள்ளது?
ஜெயலலிதா 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்தபோது, 74 தலைவர்கள் வந்து பார்த்தார்கள். அப்படி இருக்கும்போது, ஜெயலலிதா மரணம் எப்படி மர்மமாக இருக்கும்?
சசிகலா மற்றும் தினகரன் மீது புகார் சொல்லும் பன்னீர் செல்வத்துக்கு தண்டனை கொடுக்க வேண்டும். இதற்காகவே, நான் பொது மக்களிடமும், இளைஞர்களிடமும் நீதி கேட்க வந்துள்ளேன்.
அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் எப்போது எந்த கட்சியில் இருப்பார் என்று யாருக்கும் தெரியாது. ஒவ்வொரு பக்கமும் காற்று அடிக்கும் போது அவர் ஒவ்வொரு கட்சிக்கும் சென்று விடுவார். இவர் அதிமுகவை விமர்சிக்க என்ன அருகதை உள்ளது?
அ.தி.மு.க.வை காப்பாற்ற வந்தவர் தான் தினகரன். இவர்தான் நிதி அமைச்சர் என்று சொன்ன அமைச்சர்கள், இன்று ஏன் மவுனமாக இருக்கிறார்கள்?
ஓ.பி.எஸ். தமிழகத்தில் அனாதையாக திரியும் காலம் வெகு விரைவில் வர உள்ளது. தினகரன் மவுனமாக இருப்பது, தமிழகத்தில் பெரிய மாற்றத்தை உருவாக்கும்.
திகாரில் இருந்து தினகரன் விடுதலையாகி வரும்போது ஒரு கோடி தமிழர்கள் அவரை வரவேற்பார்கள். நிலத்தை நிராகரித்து விட்டு தண்ணீர் செல்லாததை போல சசிகலா- தினகரன் இல்லாமல் கட்சி செயல்படாது.
இவ்வாறு அவர் பேசினார்.