தொடங்கிய இடத்துக்கே வந்துசேர்ந்த நாஞ்சில் சம்பத்... யூடர்ன் அடித்து திமுகவுக்கு வந்தார்..!

By Asianet TamilFirst Published Mar 25, 2019, 7:59 AM IST
Highlights

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசிய நாஞ்சில் சம்பத், தான் திமுகவில் இருப்பதாக அறிவித்திருக்கிறார்.
 

தினகரன் அணியிலிருந்து விலகிய பிறகு இலக்கிய வட்ட நிகழ்வுகளில் பங்கேற்று வந்த நாஞ்சில் சம்பத், தேர்தலையொட்டி திமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருந்தார். திமுகவில் முறைப்படி இணையாமலேயே அக்கட்சி பொதுக்கூட்டங்களில் பங்கேற்றுவந்தார். இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினை நாஞ்சில் சம்பத் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிம் அவர் பேசினார்.
“திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின்  வேட்பாளர்களையும் 18 தொகுதி இடைத்தேர்தல்களில் களம் காணும் வேட்பாளர்களையும் ஆதரித்து பிரசாரம் செய்ய இருக்கிறேன். வரும் 26-ம் தேதி முதல் ஏப்ரல் 16-ம் தேதி வரை தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட போகிறேன். அதற்காக திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து அவருடைய ஆசியைப் பெற வந்தேன். நான் ஏற்கனவே திமுக பொதுக்கூட்டங்களில் 4 முறை பங்கேற்று பேசிவிட்டேன்.  தற்போது திராவிட இயக்கத்தின் கொள்கைகளை வென்றெடுக்கிற தலைமை ஸ்டாலினிடம் மட்டுமே உள்ளது.  நான் தற்போது திமுகவில்தான் இருக்கிறேன்.” என்று தெரிவித்திருக்கிறார்.


தொடக்கக் காலத்தில் திமுகவில் இயங்கிவந்த நாஞ்சில் சம்பத், மதிமுகவில் நீண்ட காலம் வைகோவுடன் பணியாற்றினார். 2011-ம் ஆண்டில் மதிமுகவிலிருந்து விலகி, அதிமுகவுக்கு தாவினார் நாஞ்சில் சம்பத். அங்கே அவருக்கு துணை கொள்கை பரப்புச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா - தினகரன் அணியில் இருந்துவந்த நாஞ்சில், தினகரனுக்காக தீவிரமாக களமாடினார். பின்னர் தினகரன் அணியிலிருந்து விலகிய நாஞ்சில் சம்பத் தற்போது மீண்டும் தொடங்கிய இடத்துகே வந்துவிட்டார்.

click me!