
ஆளுநரிடம் மனு கொடுத்து ஆட்சி செய்ய நினைப்பது கோழை தனம் எனவும், திமுக கொள்ளை புறமாக கோட்டைக்கு வர நினைப்பதாகவும், தினகரனின் தீவிர விசுவாசி நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலாவுக்கு தீவிர விசுவாசியாக மாறினார் நாஞ்சில் சம்பத். அவர் சிறைக்கு சென்றதும் சசிகலாவால் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட டிடிவி தினகரனுக்கு ஆதரவாளராய் திகழ்ந்து வருகிறார்.
ஆர்.கே.நகர் தேர்தலில் அதிமுகவின் பிரதான சின்னமான இரட்டை இலை முடக்கப்பட்ட பின் அதை மீட்கும் முயற்சியில் டிடிவி தினகரன் ஈடுபட்டு வந்தார். அப்போது இரட்டை இலையை மீட்க லஞ்சம் கொடுத்த புகாரில் சிறைக்கு சென்றார்.
தினகரன் சிறையில் இருக்கும்போது அதிமுக அமைச்சர்கள் அவரை பற்றி வாய் திறக்கவில்லை. ஆனால் நாஞ்சில் சம்பத் அனைத்து தொலைக்காட்சிகளிலும் தினகரனை பற்றி புகழ்ந்து தள்ளினார்.
இதனிடையே தினகரனால் மட்டுமே அதிமுகவை காப்பாற்ற முடியும் என்றும் ஒ.பி.எஸ்ஸிடம் சென்றால் தான் நான்டுகிட்டு செத்துவிடுவேன் என்றும் தினகரனை ஒதுக்கினால் ஆட்சி நிலைக்காது என்றும் எடப்பாடி மற்றும் ஒ.பி.எஸ் தரப்பினரிடம் கடும் கடுப்பை சம்பாதித்தார்.
இந்நிலையில், தினகரனை சந்தித்துவிட்டு வந்த நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது,தினகரனுக்கு ஆதரவு தொடர்ந்து பெருகி கொண்டே வருவதாகவும், அதிமுகவின் தலைவிதியை தினகரனே தீர்மானிப்பார், கட்சியை வழிநடத்த தினகரனால் தான் முடியும் என்றும் தெரிவித்தார்.
தொண்டர்கள் தினகரன் மேல் தான் நம்பிக்கை வைத்துள்ளதாகவும், அவற்றை காப்பாற்றும் வகையில் தினகரன் நடந்து வருவதாகவும் குறிபிட்டார்.
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அவர்கள் நேற்று முன் தினம் தமிழக ஆளுநரை சந்தித்து சட்டமன்றத்தில் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று மனு கொடுத்திருப்பது அவர்களின் விபரீத ஆசை என தெரிவித்துள்ளார்.
திமுக தன்னுடையை இருப்பை இழந்து விட்டது என்பதை ஸ்டாலினுக்கு நினைவூட்ட விரும்புவதாகவும், ஆளுநரிடம் மனு கொடுத்து ஆட்சி செய்ய நினைப்பது கோழை தனம் எனவும், திமுக கொள்ளை புறமாக வழியாக கோட்டைக்கு வர நினைப்பதாகவும் குற்றம் சாட்டினார்.