
அரசியலுக்கு வருவது உறுதி, இது காலத்தின் கட்டாயம் வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்றும் வரும் உள்ளாட்சி தேர்தலுக்கு நேரமில்லாததால் போட்டியிடவில்லை என்றும் நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவது குறித்து அவர் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
உண்மை, உழைப்பு, உயர்வு இதுதான் தாரக மந்திரம். நல்லதே நினைப்போம். நல்லதே செய்வோம். நல்லதே நடக்கும். இதுதான் நமது கொள்கை. வரும் தேர்தலில், நம்ம படையும் இருக்கும் என்று ரஜினிகாந்த் கூறினார்.
ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து, பல்வேறு கட்சி தலைவர்கள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் டிடிவிதினகரன் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத், ரஜினி அரசியல் பிவேசம் குறித்து கூறியுள்ளார்.
நாஞ்சில் சம்பத், நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசும்போது, தமிழகத்தில் பலர் கட்சி தொடங்கி உள்ளனர். ரஜினியும் பத்தோடு ஒன்று பதினொன்றாக தொடங்கி உள்ளார். அரசியலில் ஈடுபடுவது பெரிய விஷயமல்ல என்றார்.
அரசியலில் பல தடைகளை, சவால்களை சந்திக்க வேண்டும். அரசியலில் கரை சேர்ந்து வெற்றி முகடை எட்டிப்பிடிப்பது சாதாரண விஷயமல்ல என்று கூறினார்.
ரஜினியின் இன்றைய அரசியல் அறிவிப்பில் தாமரையின் சாயல் இருப்பதை பார்க்கிறேன் என்று சந்தேகம் கூறிய நாஞ்சில் சம்பத், தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியுடன் சேருபவர்கள் யாரும் வெற்றி பெறுவதில்லை என்று குறிப்பிட்டார்.
யார் வேண்டுமானாலும், அரசியலுக்கு வரலாம். கூட்டணி அமைக்கலாம். ஆனால் கரை சேருவதும் வெற்றியை ருசிப்பதும் சிலருக்கு மட்டுமே கிடைக்கும் என்றும், டிடிவி தினகரனால் மட்டுமே தமிழகத்தில் மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்றும் நாஞ்சில் சம்பத் கூறினார்.