
ஆன்மீக அரசியல் என்றால் என்ன என்று ரஜினிகாந்த் விளக்கமளித்துள்ளார்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்தடித்த ரஜினிகாந்த், தனது அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார். தனிக்கட்சி தொடங்கி அடுத்துவரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் அவரது கட்சி போட்டியிடும் என்றும் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.
ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் என்பது அவரது ரசிகர்களால் 1996லிருந்து எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் பிரவேசம் குறித்த தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்காமல் இருந்த ரஜினிகாந்த், தனிக்கட்சி தொடங்கி நேரடி தேர்தல் அரசியலில் இறங்குவதை உறுதிப்படுத்திவிட்டார்.
தமிழ்நாட்டு அரசியல் மிகவும் மோசமாகிவிட்டது. தமிழக அரசியலைக் கண்டு மற்ற மாநிலத்தினர் சிரிக்கின்றனர். அந்த அளவுக்கு தமிழக அரசியல் மோசமாகிவிட்டது. இந்த நிலையிலும் என்னை வாழவைத்த தமிழக மக்களுக்கு ஜனநாயக ரீதியில் நான் நன்மை செய்யாவிட்டால், சாகும்வரை அந்த குற்ற உணர்வு எனக்குள் இருக்கும் என தெரிவித்தார்.
மேலும் தனது அரசியல் ஆன்மீக அரசியலாக இருக்கும் என ரஜினி தெரிவித்தார்.
ரசிகர்களுடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினியிடம் ஆன்மீக அரசியல் என்பதை எதை உணர்த்துகிறது என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ஆன்மீக அரசியல் என்றால், நேர்மையான தர்மமான அரசியல் என்று அர்த்தம் என ரஜினி பதிலளித்தார்.