
பெங்களூரு, பரப்பரன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து இருப்பதாக டிஐஜி ரூபா கூறியிருப்பது அடிப்படை ஆதாரம் இல்லாதது என்றும் இதில் எந்தவிதமான உண்மையும் இல்லை என்றும் அதிமுக அம்மா அணியின் செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று செய்தியாளரிடம் பேசினார். அப்போது, சசிகலா மீதான புகார் அபத்தமானது. அடிப்படை ஆதாரம் இல்லாதது. எந்தவிதமான உண்மையும் இல்லை. டி.ஐ.ஜி. அந்தஸ்தில் உள்ள உயர் அதிகாரி பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பகிரங்கமாக தெரிவித்து இருப்பதன் மூலம் இதை நாம் கணக்கில் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் கூறியதை உயர் அந்தஸ்தில் உள்ள டிஜிபி மறுத்து இருக்கிறார் என்றார்.
ஏற்கனவே, ஜெயலலிதாவுடன் சசிகலா சிறைவாசம் இருந்தபோது, எந்த பார்வையாளரையும் சந்திக்க அனுமதித்தது இல்லை. சிறைத்துறை விதிக்கு உட்பட்டே சந்திக்கிறார்.
உச்சநீதிமன்றத்தில் தண்டனையை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் அவர் விடுதலையாவார் என்று கோடிக்கணக்கான தொண்டர்கள் நம்பிக்கையில் உள்ள நிலையில் அதை களங்கப்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளதாக கூறினார்.
இதற்காக பெண் அதிகாரியை யாரோ தூண்டி விடுகிறார்கள். இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. இன்னும் ஓரிரண்டு நாட்களில் தெரிந்து விடும் என்று நாஞ்சில் சம்பத் கூறினார்.