தாய் கழகத்தில் தஞ்சம் புக காத்திருக்கும் நாசா... தடபுடலா வரவேற்க்க தயாரான புரட்சிப்புயல்!

First Published Jun 26, 2018, 12:01 PM IST
Highlights
Nanjil sambath ready to join in MDMK


‘துப்பினால் துடைத்துக்கொள்வேன்...’ இந்த வாக்கியத்தை கேட்கும்போதே அரசியல் தெரியாதவர்களுக்கும் நாஞ்சில் சம்பத்தின் முகம் வந்துபோகும். பேச்சாளர், இலக்கியவாதி, அரசியல்வாதி எனும் பல்வேறு முகம் கொண்ட நாஞ்சில் சம்பத்தின் வாழ்க்கைப் பாதை டிஜிட்டல் மீடியாக்களை மட்டும் பார்க்கும் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அத்தகைய நாஞ்சில் சம்பத்தின் சமீபகால அரசியல் போக்கு பலராலும் விமர்சனத்துக்கு உள்ளானது. தினகரன் ஆதரவாளராக இருந்த நாஞ்சில் சம்பத் அரசியலில் இருந்து ஒதுங்கினார். தற்போது மீண்டும் ஒரு கட்சியில் இணையப்போகிறார் என்கிறார்கள்.

ம.தி.மு.க’வில் மேடை பேச்சாளராக இருந்து வைகோவிற்கு இணையாக அனைத்து கூட்டங்களிலும் பேசி வந்தவர் நாஞ்சில் சம்பத். வைகோவின் பாணியிலயே அவர் பேசி வந்ததது தொண்டர்களை வெகுவாக கவர்ந்தது. அவரது வெள்ளை உடையும், நீளமான கறுப்பு துண்டும் வைகோவை பிரதிபலித்தது. ஈழத்துக்கு ஆதரவாக தனது பேச்சை பல இடங்களில் பேசியிருக்கிறார். ம.தி.மு.க., கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரிய மதிப்பு கொண்டிருந்தவர் நாஞ்சில் சம்பத்.

ஆனால் ஒரு கட்டத்தில் வைகோவிற்கும், நாஞ்சில் சம்பத்திற்கும் கருத்து முரண்பாடு எழுந்துள்ளது. ம.தி.மு.க’வில் இருந்து விலகி செல்வி.ஜெ.ஜெயலலிதாவை சந்தித்து அ.இ.அ.தி.மு.க’வில் தன்னை இணைத்துக்கொண்டார். அப்போது அவருக்கு வழங்கப்பட்ட இன்னோவா காரும் பிரபலம் ஆனது.

ஜெயலலலிதாவிற்கு ஆதரவாக பேசி வந்தார். இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணம் அவரை மீண்டும் சங்கடத்துக்குள்ளாக்கியது. சசிகலா தலைமையின் அ.தி.மு.க’வை விட்டு விலகினார். தனது இன்னோவா காரை அ.தி.மு.க., தலைமை கழகத்தில் ஒப்படைத்தார். ஆனால் அவரை அழைத்து பேசினார் சசிகலா. ’நீங்கள் கட்சிக்கு வேண்டும்...’ என்கிற ரீதியில் மரியாதையாக நடத்தப்பட்டார் நாஞ்சில் சம்பத். மீண்டும் அ.தி.மு.க’வில் பணியாற்ற தொடங்கினார்.

இதன் பின்னர் பழனிசாமி, பன்னீர் செல்வம், தினகரன், சசிகலா என நடந்த களேபரத்தில் தினகரன் பக்கம் சென்றார் நாஞ்சில் சம்பத். சில காலத்துக்குப் பின்னர் தினரன் ‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்’ எனும் கட்சியை ஆரம்பித்தார். இந்தப் பெயரில் திராவிடம், அண்ணா வாசகங்கள் இல்லை எனக்கூறி கட்சியில் இருந்து விலகினார் நாஞ்சில் சம்பத். ‘அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப் போவதாகவும், இலக்கிய கூட்டங்களில் மட்டுமே பேசப்போவதாகவும் அறிவித்தார்’.

ஆனால் தற்போது மீண்டும் அரசியலில் இறங்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இலக்கிய கூட்டங்கள் அதிகளவில் வருவதில்லை. வந்தாலும் இலக்கியவாதிகளின் மதிப்பு தெரியாதவர்கள்தான் தமிழர்கள். ஆதலால் இலக்கியவாதியாக சில நாட்கள் இருந்த நாஞ்சில் சம்பத் அரசியல் பக்கம் மீண்டும் கவனத்தை குவிக்கிறார்.

அவரின் முதல் தேர்வாக இருந்தது தி.மு.க. ஆனால் அங்கே ஸ்டாலினின் கொடி பறப்பதால் அக்கட்சியை தவிர்த்திருக்கிறார். தனது தாய் கழகமான ம.தி.மு.க’வில் இணைவது பற்றி யோசித்து வருவதாக தெரிகிறது. சமீபத்தில் வைகோவை சந்தித்தும் பேயுள்ளார் என்கிறார்கள். ’நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம். உங்களை எதிரியாக எப்போதும் நான் கருதியதில்லை’ என பேசியிருக்கிறார் வைகோ.

நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் நேரங்களில் நாஞ்சில் சம்பத்தின் அரசியல் பேச்சு வைரலாகும் என்பது இப்போதே தெரிகிறது.

click me!