முரண்பாட்டின் மொத்த சின்னமே திமுக தான்.. அந்த விஷயத்துல அவங்கள யாராலும் மிஞ்ச முடியாது!! திமுகவை திக்குமுக்காட வைத்த ஜெயக்குமார்

Asianet News Tamil  
Published : Jun 26, 2018, 12:00 PM ISTUpdated : Sep 19, 2018, 02:34 AM IST
முரண்பாட்டின் மொத்த சின்னமே திமுக தான்.. அந்த விஷயத்துல அவங்கள யாராலும் மிஞ்ச முடியாது!! திமுகவை திக்குமுக்காட வைத்த ஜெயக்குமார்

சுருக்கம்

minister jayakumar retaliation to stalin

முரண்பாட்டின் மொத்த சின்னமே திமுக தான் எனவும் காலத்திற்கும் நேரத்திற்கும் தகுந்தாற்போல தங்களை மாற்றிக்கொள்வதில் அவர்களைவிட சிறந்தவர்களே கிடையாது எனவும் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். 

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மாவட்ட வாரியாக ஆய்வு செய்வதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. மேலும் ஆளுநர் ஆய்விற்கு செல்லும் மாவட்டங்களில் எல்லாம் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் கருப்பு கொடி போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. 

அண்மையில் ஆளுநர் நாமக்கல் சென்றபோது கருப்பு கொடி காட்டிய திமுகவினர் 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டாலின் தலைமையில் ஏராளமான திமுகவினர் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றனர். அவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். எனினும் ஸ்டாலின் உள்ளிட்ட 1111 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

மேலும் ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ஆளுநருக்கு மாநிலத்தின் எந்த பகுதிக்கு செல்லவும் அதிகாரம் உள்ளது. அரசு அதிகாரிகளுடன் ஆலோசிப்பதற்கு ஆளுநருக்கு எந்த தடையும் இல்லை. ஆளுநரின் செயல்பாடுகளை தடுப்பவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டது. 

இந்நிலையில், மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கான சட்டமன்ற கூட்டத்தொடர் 10 நாட்கள் விடுமுறைக்கு பிறகு நேற்று மீண்டும் கூடியது. சட்டமன்றம் கூடியதும் நேரமில்லா நேரத்தின் போது ஆளுநரின் ஆய்வு குறித்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேச முற்பட்டார். ஆனால் விதி எண் 92(7)ன்படி ஆளுநர் மற்றும் குடியரசு தலைவர் குறித்து பேச அனுமதிக்க முடியாது என சபாநாயகர் தெரிவித்துவிட்டார். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், 1995ல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அப்போதைய ஆளுநர் சென்னா ரெட்டிக்கு எதிராக விவாதம் நடந்ததை சுட்டிக்காட்டி பேசினார். சட்டமன்றத்துக்கு உள்ளேயும் அதை சுட்டிக்காட்டித்தான் பேச அனுமதி கோரினார். ஆனால் 1999ல் செய்யப்பட்ட விதிமாற்றத்தை குறிப்பிட்டு சபாநாயகர் அனுமதி மறுத்தார். 

இந்நிலையில், ஆளுநரின் ஆய்வு குறித்து சட்டமன்றத்தில் பேச அனுமதி மறுக்கப்பட்டது குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், திமுக தான் முரண்பாட்டின் மொத்த சின்னம். நேரத்திற்கும் காலத்திற்கும் தகுந்தாற்போல் தங்களை மாற்றிக்கொள்வதில் அவர்களை விட சிறந்தவர்கள் யாரும் கிடையாது. ஆளுநரை பற்றி சட்டமன்றத்தில் விவாதிக்க கூடாது என 1999ல் விதிகளை மாற்றியதே திமுக தான். அன்று கதவை பூட்டிய அவர்களே, இன்று திறக்க வேண்டும் என்று கூறுவது எந்த வகையில் நியாயம் என ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார். 
 

PREV
click me!

Recommended Stories

DMK Alliance: திமுக கூட்டணி ஆட்சி அமைத்து, தமிழகத்தில் வரலாறு படைக்கும்: கிரிஷ் சோடங்கர்
Tamil Nadu Assembly Election Results 2026: தபால் வாக்குகளில் முன்னிலைப் பெறும் திமுக..!