ரியல் எஸ்டேட் பிசினஸ்மேனை நாங்குநேரி வேட்பாளராக்கிய காங்கிரஸ்... இடைத்தேர்தல் செலவுக்காக எடுத்த முடிவா..?

By Asianet TamilFirst Published Sep 28, 2019, 7:53 AM IST
Highlights

பல ஆண்டுகளாக சென்னையில் ரூபி குரூப் ஆஃப் கம்பெனிஸ் என்ற பெயரில் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்துவருகிறார். தென் சென்னையில் இவருடைய கம்பெனி ஏராளமான அடுக்குமாடி வீடுகளைக் கட்டியிருக்கிறது. இதேபோல டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும் இவருடையதுதான். அந்த நிறுவனத்தின் தலைவரான ரூபி மனோகரன்தான் தற்போது நாங்குநேரி தொகுதி வேட்பாளர் ஆகியிருக்கிறார்.
 

இடைத்தேர்தலில் பணத்தைத் தண்ணீராய் செலவு செய்ய வேண்டியிருக்கும் என்பதால், நாங்குநேரி தொகுதியில் ரியல் எஸ்டேட் அதிபர் ரூபி மனோகரனை காங்கிரஸ் கட்சி களத்தில் இறக்கிவிட்டிருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.


 காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கு அக்டோபர் 21 அன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணியில் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் காங்கிரஸின் வெற்றிக்காக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி  தலைமையில் தேர்தல் பணிக்குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. 
இந்தத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் உள்பட உள்ளூரைச் சேர்ந்த பலரும் முயற்சி செய்துவந்தார்கள்.  ஆனால், திமுகவிடம் நாங்குநேரியை காங்கிரஸ் கட்சி கேட்டம்போது, குமரி அனந்தனை முன்னிறுத்தியே கேட்ட  தகவல்களும் வெளியாயின. ஆனால், குமரி அனந்தன் 80 வயதைக் கடந்தவர் என்பதாலும்,  உடல்நிலையைக் காரணம் காட்டியும் அவருக்கு சீட்டு வழங்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. உள்ளூரைச் சேர்ந்தவர்களை இடைத்தேர்தல் செலவை காரணம் காட்டி காங்கிரஸ் தலைமை ஒதுக்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாயின.
இந்நிலையில் ரியல் எஸ்டேட் பிசினஸ்மேன் ரூபி மனோகரனை காங்கிரஸ் கட்சி நாங்குநேரி தொகுதி வேட்பாளாராக அறிவித்துள்ளது. இவருடைய சொந்த ஊர் கன்னியாகுமரி. ஆனால், பல ஆண்டுகளாக சென்னையில் ரூபி குரூப் ஆஃப் கம்பெனிஸ் என்ற பெயரில் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்துவருகிறார். தென் சென்னையில் இவருடைய கம்பெனி ஏராளமான அடுக்குமாடி வீடுகளைக் கட்டியிருக்கிறது. இதேபோல டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும் இவருடையதுதான். அந்த நிறுவனத்தின் தலைவரான ரூபி மனோகரன்தான் தற்போது நாங்குநேரி தொகுதி வேட்பாளர் ஆகியிருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியில் காஞ்சி தெற்கு மாவட்ட தலைவராக ஒரு முறை ரூபி மனோகரன் பதவி வகித்தாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் இடைத்தேர்தல் என்பது செலவுமிகுந்த தேர்தலாகிவிட்டது. பணத்தைத் தண்ணீராய் செலவு செய்ய சக்தி உள்ளவர்கள் மட்டுமே போட்டியிடும் என்ற நிலையும் வந்துவிட்டது. அதை மனதில் வைத்து ரியல் எஸ்டேட் பிசினஸ்மேனை நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி களமிறக்கியிருப்பதாக அக்கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.

click me!