கைப்பற்ற வேண்டும் என்றால் வெங்கடாசலபதி , சபரிமலை ஐயப்பன் கோவிலை கைப்பற்று..!! கொந்தளித்த சீமான்...!!

Published : Mar 04, 2020, 05:38 PM IST
கைப்பற்ற வேண்டும் என்றால் வெங்கடாசலபதி , சபரிமலை ஐயப்பன் கோவிலை கைப்பற்று..!! கொந்தளித்த சீமான்...!!

சுருக்கம்

கோயில்களை மட்டும் சிறப்பாக நிர்வகிக்கும் பேராற்றல் மத்திய அரசுக்கு இருக்கிறதென்றால், முதலில் திருப்பதி வெங்கடாசலபதி கோயில், சபரிமலை ஐயப்பன் கோயில் போன்றவற்றைத் தன்வயப்படுத்தி நிர்வகித்து பராமரித்துக் காட்டிவிட்டு தமிழகத்திற்கு வரலாம்...

தமிழக கோயில்களை மத்தியத் தொல்லியல் துறை தன்வசமாக்க முனைந்தால் தமிழகம் போர்க்களமாக மாறும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் முழு விவரம் :-  தமிழகத்திலுள்ள கோயில்களின் நிர்வாகத்தை மத்தியத் தொல்லியல் துறை தன்வயப்படுத்த இருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. ஏற்கனவே, தமிழர்களின் மெய்யியலையும், வழிபாட்டு முறைமைகளையும், தமிழ் இறைகளையும் ஆரியம் திருடித் தன்வயப்படுத்திக் கொண்டதை எதிர்த்து எதிர்ப்புரட்சி செய்து நாம் போராடிக் கொண்டிருக்கையில், தற்போது தமிழகக் கோயில்களின் நிர்வாகத்தை மத்திய அரசு எடுத்துக் கொள்ள முனைவது பெருஞ்சினத்தையும், அறச்சீற்றத்தையும் தருகின்றது. 

 மத்திய அரசின் இச்செயல்பாடு வன்மையானக் கண்டனத்திற்குரியது. தமிழக கோயில்கள் என்பன வெறும் வழிபாட்டுத்தலங்கள் மட்டுமல்ல; அவைப் பண்பாட்டு அடையாளங்கள். வரலாற்றின் தொன்மைமிக்க தேசிய இனமான தமிழர் என்கின்ற இனத்தின் பெருமையை, முதுமையை, கட்டிடக்கலையை, பழங்காலத்திலேயே தமிழர்கள் பெற்றிருந்த பல்துறைசார்ந்த அறிவினை, அறிவியல் நுட்பத்தினை பறைசாற்றுகின்ற வரலாற்றுத்தடங்களாகும்.  சாலைப்போக்குவரத்து, பாதுகாப்புத்துறை, வானூர்திப் போக்குவரத்து, பொதுத்துறை நிறுவனங்கள்,கல்வி, தண்ணீர் என யாவற்றையும் நிர்வகிக்க இயலாது தனியாரிடம் ஒப்படைத்து வரும் மத்திய அரசு கோயில்களை மட்டும் சிறப்பாக நிர்வகிக்கும் என நம்புவதைப் போன்றதொரு மடமைத்தனம் வேறில்லை. கோயில்களை மட்டும் சிறப்பாக நிர்வகிக்கும் பேராற்றல் மத்திய அரசுக்கு இருக்கிறதென்றால், முதலில் திருப்பதி வெங்கடாசலபதி கோயில், சபரிமலை ஐயப்பன் கோயில் போன்றவற்றைத் தன்வயப்படுத்தி நிர்வகித்து பராமரித்துக் காட்டிவிட்டு தமிழகத்திற்கு வரலாம்.  அதனைச் செய்யத் துணிவிருக்கிறதா?

 தமிழகக் கோயில்கள் தற்போது இந்து சமய அறநிலையத்துறையினரால்‌ நிர்வகிக்கப்பட்டு வரும் வேளையில் ' தமிழ் சமய அறநிலையத்துறை' என அதனைப் பெயர்மாற்றம் செய்யக் கோரி நாம் போராடிக் கொண்டிருக்கையில் மத்தியத் தொல்லியல் துறை தமிழகக் கோயில்களின் பராமரிப்பையும், கட்டுப்பாட்டையும் எடுத்துக் கொள்ள முடிவு செய்திருப்பது தமிழகத்தின் தன்னுரிமையைப் பறிக்கும் மத்திய அரசின் எதேச்சதிகாரப்போக்காகும். 

தமிழகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்கள் மத்திய தொல்லியல் துறையின் வசம் சென்றால் இவ்வளவு நாட்களாக இயல்பாக நடந்தேறிய வழிபாடுகளும், மக்களின் வருகையும் இறுக்கம் மிகுந்ததாக மாற்றப்பட்டு அக்கோயில்களின் தனித்தன்மையும், சிறப்பம்சங்களும், பாரம்பரியப் பெருமைகளும் சிதைத்து அழிக்கப்படக்கூடிய ஆபத்துகள் உள்ளன. ஏற்கனவே, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மத்திய அரசின் வசம் சென்று அதன் வழிபாடுகள் பாதிக்கப்பட்டு பெரும் அரசியல் அழுத்தங்களும், சட்டப் போராட்டங்களும் நிகழ்த்தப்பட்டே அதனை மீட்டுக்கொண்டு வர முடிந்தது. மத்திய தொல்லியல் துறை நிர்வகிக்கும் கோயில்களைவிட தமிழக அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்கள் ஒப்பீட்டளவில் சிறப்பாகவே பராமரிக்கப்பட்டு வருகின்றன. அப்படியிருக்கையில், மத்தியத் தொல்லியல் துறை தமிழகக் கோயில்களை கையகப்படுத்த முனைவது தேவையற்ற ஒன்றாகும். 
 

 

PREV
click me!

Recommended Stories

திமுக ஆட்சியில் அதிகாரிகளின் ராஜ்ஜியம் நடக்கிறது..! வெறுப்பில் அதிமுகவில் இணைந்த செங்கோட்டையன் அண்ணன் மகன்..!
இந்த திமுகவை நம்பாதீங்க..! மக்களை நம்ப வைச்சு ஏமாற்றுவதுதான் அவங்க வேலையே..! விஜய் எச்சரிக்கை..!