கொரோனா தொற்றால் உயிரிழந்த 22 வயதேயான அவசர ஊர்த்தி பணியாளர்..! 50 லட்சம் இழப்பீடு வழங்க சீமான் கோரிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Jun 25, 2020, 2:08 PM IST
Highlights

மக்களுக்கானப் பெரும்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அக்களத்திலேயே உயிரிழந்த தம்பி கணேசனின் ஈகம் போற்றுதற்குரியது. இவ்வேளையில், தம்பியை இழந்து நிற்கும் அவரது குடும்பத்திற்கு 50 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் 

கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்புப்பணிகளில் ஈடுபட்டு நோய்த்தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த திருப்பூர் அவசர ஊர்திப் பணியாளர் கணேசன் குடும்பத்திற்கு 50 இலட்ச ரூபாய் இழப்பீடும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திருப்பூர் மாவட்டம், அவிநாசிபாளைய அவசர ஊர்தியில் மருத்துவ உதவியாளராக பணிபுரிந்து வந்த திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதேயான தம்பி கணேசன் அவர்கள் கொரோனா பரவல் தடுப்புப்பணிகளில் முன்கள வீரராக மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றி, தற்போது கொரோனோ நோய்த்தொற்றினாலேயே பாதிக்கப்பட்டு உயிரிழந்த செய்தியறிந்து பெரும் துயருற்றேன். 

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உடன் பணியாற்றிய அவசர ஊர்தி பணியாளர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து அவர்களது துயரத்தில் பங்கெடுக்கிறேன். மக்களுக்கானப் பெரும்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அக்களத்திலேயே உயிரிழந்த தம்பி கணேசனின் ஈகம் போற்றுதற்குரியது. இவ்வேளையில், தம்பியை இழந்து நிற்கும் அவரது குடும்பத்திற்கு 50 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.உலகையே அச்சுறுத்தி வரும் கொடிய கொரோனா நோய்த்தொற்றை எதிர்த்து களமாடும் முன்களப்பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரதுறைப் பணியாளர்கள் , தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள் ஆகியோரின் பாதுகாப்பினை உறுதிசெய்ய பெருங்கவனமெடுக்க வேண்டும். 

மேலும் அவர்களுக்கு முறையான பாதுகாப்பு கருவிகள், முறையான உடல் பரிசோதனையும், தேவையான ஓய்வும் அளிக்கப்பட வேண்டும் எனவும் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.மேலும், இதேபோன்று கொரோனா பரவல் தடுப்புப்பணிகளில் ஈடுபட்டு நோய்த் தொற்றுக்குள்ளாகி இறக்கும் முன்களப்பணியாளர்களின் குடும்பத்திற்கு 50 இலட்ச ரூபாய் இழப்பீடும் அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
என்று அதில் கூறப்பட்டுள்ளது.

click me!