ராஜிவ்காந்தி கொலை வழக்கு தேச துரோக குற்றமல்ல..?? அமைதிப்படையை அனுப்பியதால் வந்த வினை... சீறும் சீமான்...!!

Published : Feb 13, 2020, 04:36 PM IST
ராஜிவ்காந்தி கொலை வழக்கு  தேச துரோக குற்றமல்ல..??  அமைதிப்படையை அனுப்பியதால் வந்த வினை... சீறும் சீமான்...!!

சுருக்கம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கு என்பது தேசத்துரோகக் குற்றமல்ல; நாட்டின் இறையாண்மையைத் தகர்க்கும் எண்ணத்தோடு நடத்தப்பட்ட கொலை வழக்கல்ல; அமைதிப்படையை அனுப்பியதால் வந்த எதிர்வினை. 

எழுவர் விடுதலையைச் சாத்தியப்படுத்தி மாநிலத்தின் தன்னாட்சியையும், தன்னுரிமையையும் நிலைநாட்ட வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:-  நாம் தமிழர் கட்சி தம்பி பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரது விடுதலை குறித்து தமிழக ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுக்கலாம் என மத்திய அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழக அரசு 161வது பிரிவின்படி, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளைக் கடந்தும், அதற்கு ஒப்புதல் தருவதற்கு எவ்விதக் கால அவகாசமும் இல்லையென்பதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு எழுவரையும் விடுதலை செய்ய மறுத்து காலங்கடத்தி வரும் தமிழக ஆளுநரின் செயல் வன்மையானக் கண்டனத்திற்குரியது. 

இந்நிலையில், ஆளுநருடன் கலந்துபேசி என்ன முடிவெடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கச் சொல்லி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருப்பது வரவேற்கத்தக்கது! இது விடுதலையை நோக்கிய ஒரு முன்நகர்வு! சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் ஆளுநரின் ஒப்புதல் மூலமே சட்டமாகும் என்பது அடிப்படை விதி. இதில் ஆளுநருக்கென்று தனிப்பட்ட எவ்வித அதிகாரங்களையும் இந்திய அரசியலமைப்புச்சாசனம் வரையறை செய்யவில்லை. ஆகவே, அமைச்சரவையின் தீர்மானத்திற்கு ஆளுநர் ஒப்புதல் தரவேண்டியது அவரது தார்மீகக் கடமையாகும்.. அதனைவிடுத்து, மக்களால் தேர்வுசெய்யப்பட்ட ஓர் அமைச்சரவையின் முடிவை மக்களால் தேர்வுசெய்யப்படாத ஆளுநர் தடுத்து நிறுத்தி வைப்பாரென்றால், இது மக்களாட்சித் தத்துவத்தின் மகத்துவத்தையே குலைக்கிற கொடுஞ்செயலாகும்; மாநிலத்தின் தன்னாட்சி உரிமைக்கெதிரான மத்திய அரசின் எதேச்சதிகாரப்போக்காகும். 

ராஜீவ் காந்தி கொலை வழக்கு என்பது தேசத்துரோகக் குற்றமல்ல; நாட்டின் இறையாண்மையைத் தகர்க்கும் எண்ணத்தோடு நடத்தப்பட்ட கொலை வழக்கல்ல; அமைதிப்படையை அனுப்பியதால் வந்த எதிர்வினை.  ஆகவே, இதுவொரு பழிவாங்கும் நோக்கத்தோடு நிகழ்த்தப்பட்ட கொலை வழக்கு என்றுகூறி, இவ்வழக்கிற்கு தடா சட்டம் பொருந்தாது என ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு முன்பே உச்ச நீதிமன்றம் தெளிவுப்படுத்திவிட்டது. இவ்வழக்கிற்குத் தடா சட்டமே பொருந்தாது எனும்போது, தடா சட்டத்தின் மூலம் ஏழு பரிடமும் பெறப்பட்ட வாக்குமூலங்களை ஆதாரமாகக் கொண்டு அவர்களுக்குத் தண்டனையை அறிவித்திருப்பது மிகப்பெரும் அநீதியாகும்! 

ஆகவே, இவ்விவகாரத்தில் எழுவர் விடுதலையை வெறுமனே ஏழு பேரது விடுதலை என்ற கோணத்தில் சுருங்கப்பாராது, மாநிலத்தின் தன்னுரிமை தொடர்பான சிக்கல் என்பதை உணர்ந்து அண்ணாவின் பெயரில் இயங்கும் அதிமுக உடனடியாக இதற்கு எதிர்வினையாற்ற முன்வர வேண்டும். எழுவர் விடுதலை விவகாரத்தில் உறுதியாய் நின்றிட்ட முன்னாள் முதல்வர் அம்மையார் ஜெயலலிதா அவர்களது ஆட்சியின் நீட்சியாய் தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு அம்மையாரின் நிலைப்பாட்டை வழிமொழிந்து எழுவர் விடுதலைக்காகச் சட்டப்போராட்டமும், அரசியல்வழி அறப்போராட்டமும் நடத்தி ஆளுநருக்கு அரசியல் அழுத்தம் கொடுத்து எழுவரது விடுதலையையும் சாத்தியப்படுத்தி மாநிலத்தின் தன்னாட்சியை நிறுவிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். 

 

PREV
click me!

Recommended Stories

விஜய் மட்டுமே முழு காரணம்.. கரூரை மீண்டும் கையிலெடுத்த திமுக.. கடுமையான விமர்சனம்!
திமுக ஆட்சியில் தலைதூக்கிய துப்பாக்கி கலாசாரம்.. போட்டுத் தாக்கிய அதிமுக!