522 நாட்கள் கடந்திருச்சு..! இது நியாயமே இல்ல..! எழுவர் விடுதலையில் கொதிக்கும் ராமதாஸ்..!

By Manikandan S R SFirst Published Feb 13, 2020, 4:04 PM IST
Highlights

7 தமிழர்கள் விடுதலை குறித்த பரிந்துரை மீது 522 நாட்களைக் கடந்தும் ஆளுநர்  முடிவெடுக்காமல் இருப்பதற்கு எந்த விதமான நியாயமும் இல்லை. இந்த விஷயத்தில் முடிவெடுக்காமல் தாமதிப்பதன் மூலம் ஆளுநர் எதையும் சாதிக்க முடியாது.

ஏழு தமிழர் விடுதலை குறித்து ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது: பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 தமிழர் விடுதலை குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துகள், இந்த விவகாரம் மகிழ்ச்சியான முடிவை நோக்கி பயணிப்பதை உறுதிப்படுத்தியுள்ளன. 29 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களையும் காலவரையின்றி சிறைக் கொட்டடிகளில் அடைத்து வைக்க முடியாது என்பது தான் உச்சநீதிமன்றம் வெளிப்படுத்தியுள்ள உணர்வாகும்.

அதேநேரத்தில் 7 தமிழர்கள் விடுதலை குறித்த பரிந்துரை மீது 522 நாட்களைக் கடந்தும் ஆளுநர்  முடிவெடுக்காமல் இருப்பதற்கு எந்த விதமான நியாயமும் இல்லை. இந்த விஷயத்தில் முடிவெடுக்காமல் தாமதிப்பதன் மூலம் ஆளுநர் எதையும் சாதிக்க முடியாது. கடந்த காலங்களில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பலரின் கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதில் குடியரசுத் தலைவர் காலவரையின்றி தாமதம் செய்ததால், அவர்களின் தண்டனை ரத்து செய்யப்பட்டதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன.

தமிழக ஆளுநரின் காலவரையற்ற தாமதமும் அத்தகையதொரு சூழலுக்கு தான் அழைத்துச் செல்லும். எனவே, ஆளுநர் தேவையற்ற தாமதம் செய்யாமல் அரசியலமைப்புச் சட்டப்படியான அவரது கடமையை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு செய்யும்படி ஆளுநருக்கு தமிழக அரசு நினைவூட்ட வேண்டும். 

இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார். 

தமிழக அரசை தாறுமாறாக விமர்சித்த சீமான்..! 2 ஆண்டுகளுக்கு பின் வழக்கு பதிந்த காவல்துறை..!

click me!