சமூக நீதி களத்தில் சீமான்..!! பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்காக கொந்தளிப்பு..!!

By Ezhilarasan BabuFirst Published May 28, 2020, 12:09 PM IST
Highlights

முதுநிலை மருத்துவ மேற்படிப்புகளுக்கான மத்திய தொகுப்பு ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பறிப்பது சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் கொடுஞ்செயல் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முதுநிலை மருத்துவ மேற்படிப்புகளுக்கான மத்திய தொகுப்பு ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பறிப்பது சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் கொடுஞ்செயல் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம் :- நாம் தமிழர் கட்சி. மருத்துவ இளங்கலை மற்றும் முதுநிலைப் படிப்புகளிலுள்ள மருத்துவப் பட்ட மேற்படிப்புகளுக்கான மத்திய தொகுப்பு ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான  இடஒதுக்கீட்டைப் பறித்திருப்பது சமூகநீதியைக் குழிதோண்டி புதைக்கும் கொடுஞ்செயலாகும். கடந்த சில ஆண்டுகளாக பிற்படுத்தப்பட்ட மருத்துவ மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு பறிக்கப்பட்டது. அப்போதே அதனை வன்மையாகக் கண்டித்து போராடிய நிலையில், தற்போது இவ்வாண்டும் இடஒதுக்கீடு மறுக்கப்படுவது அடித்தட்டு உழைக்கும் மக்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதியன்றி வேறில்லை.

 இந்தியாவிலுள்ள ஒட்டுமொத்த மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ்., மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு 50  சதவீதத்தை மத்தியத் தொகுப்புக்கு ஒவ்வொரு கல்லூரியும் அளிக்க வேண்டும் என்ற விதியுள்ளது. இப்படி ஆண்டொன்றுக்கு மருத்துவக் கல்லூரிகளினால் மத்தியத் தொகுப்புக்கு ஒதுக்கப்படும்  இடங்கள் மொத்தம் 40,842 ஆகும். இதில் இட ஒதுக்கீட்டின்படி, பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டால் ஆண்டொன்றுக்கு ஏறத்தாழ 11,027 இடங்கள் அவர்களுக்குக் கிடைக்கப்பெறும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்த இடஒதுக்கீடு மறுக்கப்படும் காரணத்தால் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒருஇடம் கூட சமூகநீதியின் அடிப்படையில் கிடைக்கவில்லை. மத்தியத் தொகுப்பில்  பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு இல்லை என்று சொல்லும் மத்திய அரசு, முன்னேறிய வகுப்பினருக்கு மட்டும் 10 சதவீத இடஒதுக்கீட்டை மறுக்காமல்  வழங்குவதற்குப் பெயர்தான் சமூகநீதி என்றால், இது எந்த  சமூகத்திற்கான நீதி? எனும் கேள்வியெழுகிறது. இட ஒதுக்கீடு வழங்கப்படுவது சமூகநீதி அடிப்படையிலா? அல்லது மனுநீதி அடிப்படையிலா? என்ற இக்கேள்விக்கு எவரிடத்தில் பதிலுண்டு? 

தமிழகத்தைப் பொறுத்தவரை  ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டிலுள்ள மருத்துவக் கல்லூரிகள் மூலம் ஒதுக்கப்படும் 50 சதவீத இடங்கள் வாயிலாக ஏறத்தாழ 490 மருத்துவ இடங்களும், 879 முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களும் மத்தியத் தொகுப்புக்கு வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும்  27 சதவீத சமூகநீதி இட ஒதுக்கீட்டுக் கொள்கையின்படி  பிற்படுத்தப்பட்டோருக்கு குறைந்தபட்சம் 369  இடங்கள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கடந்தாண்டு இடஒதுக்கீட்டின் கீழ்  ஒரு இடம்கூட கொடுக்கப்படவில்லை. பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை அடியோடு மறுத்திருக்கும் இச்செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது அரசியலமைப்புச்சட்டத்திற்கு மட்டுமின்றி அடிப்படை மனித உரிமைகளுக்கே எதிரானது. மாநில அரசுகளின் இறையாண்மையையும் , கூட்டாட்சித்தத்துவத்தையும் கேலிக்கூத்தாக்கும் மத்திய அரசின் இத்தகைய மக்கள் விரோதச் செயல்பாடுகளை இனியும் தமிழக அரசு வேடிக்கைப் பார்க்கக் கூடாது. எனவே, துரிதமாகச் செயல்பட்டு அரசியல் அழுத்தத்தின் வாயிலாகவும், சட்ட நடவடிக்கைகள் மூலமாகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான சமூகநீதியைப் பெற்று தர வேண்டும். இல்லையென்றால், மத்திய தொகுப்புக்கு வழங்கப்படும் 50 சதவீத இடங்களை வழங்காமல் நிறுத்தி மாநில அரசே உரிய இடஒதுக்கீட்டை வழங்க வழிவகை செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். 

பிற்படுத்தப்பட்டோருக்கு இழைக்கப்படும் இம்மாபெரும் அநீதியானது அதிகாரத்தின் துணைகொண்டு ஆளும் ஆட்சியாளர்களால் தொடர்ந்து கட்டவிழ்த்து விடப்படுமாயின் அவை அரசுக்கெதிரான மாபெரும் மக்கள் புரட்சிக்கு வித்திடும் என மத்திய, மாநில அரசுகளை எச்சரிக்கிறேன் என கூறியுள்ளார்.  

 

click me!