ஊரடங்கிலும் ரயில் வரும்... விமானம் வரும்... கொரோனா மட்டும் போகாது... 11 நகரங்களில் மீண்டும் 15 நாட்கள்..!

By Thiraviaraj RMFirst Published May 28, 2020, 11:54 AM IST
Highlights

கொரோனா நோய் தொற்று அதிகமாக பரவி வருவதால் 31-ம் தேதியுடன் நிறைவடையும் ஊரடங்கை மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்க உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 

கொரோனா நோய் தொற்று அதிகமாக பரவி வருவதால் 31-ம் தேதியுடன் நிறைவடையும் ஊரடங்கை மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்க உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

4 கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், நாடு தழுவிய அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தைக் கடந்துள்ளது. கடந்த 14 நாட்களில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இதேபோல, உயிரிழந்தோர் அளவு 16 நாட்களில் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.

4-வது கட்ட ஊரடங்கின்போது, சந்தைகள், அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், உள்நாட்டு விமான சேவைகள், கடந்த 25-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்நிலையில், நோய் பரவல் தொடர்வதால், 31-ம் தேதியுடன் நிறைவடையும் ஊரடங்கை மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்க உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதில், கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதன்படி, வழிபாட்டுத் தலங்கள், உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

எனினும், மதக் கூட்டங்கள் நடத்த அனுமதி அளிக்கப்பட மாட்டாது. அதேபோல், வணிக வளாகங்கள், திரையரங்குகள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்படமாட்டாது என்று கூறப்படுகிறது.

நாட்டில் கொரோனா பாதிப்புகளில் 70 சதவீதம் அளவுக்கு 11 நகரங்களில் பதிவாகியுள்ளது. இந்த நகரங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி, டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, அகமதாபாத், கொல்கத்தா, புனே, தானே, ஜெய்ப்பூர், சூரத், இந்தூர் ஆகிய நகரங்களில் தீவிர நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், ஜூன் ஒன்றாம் தேதி முதல் கோயில்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட மத வழிபாட்டுத் தலங்களை திறக்க ஆதரவு அளிப்பதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

தெலங்கானாவில் இன்று முதல் அரசு பேருந்துகள் இயக்கப்படும் என்று முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். கேரளாவில் இன்று முதல் மதுபான விற்பனை நடைபெற உள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் கட்டுப்பாடுகளில் தளர்வு இருக்கும் என்று கூறப்படுகிறது. வரும் ஞாயிறு அன்று பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் இது தொடர்பாக அறிவிக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஆனால் பஸ், ரயில்கள் கடைகள் எல்லாம் இயங்கும் நிலையில் மேலும் 15 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தி என்ன பயன் ஏற்படப்போகிறது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 
 

click me!