குஜராத் ஒஸ்தி , தமிழகம் கேவலமா..?? காவிரி விவகாரத்தில் பாஜகவை பிரித்து மேயும் சீமான்..!!

By Ezhilarasan BabuFirst Published Apr 29, 2020, 12:23 PM IST
Highlights

வட இந்திய நதிகளைக் கைப்பற்றுவதில் மத்திய அரசு ஏன் காட்டவில்லை ? அங்கெல்லாம் நதிநீர் பிரச்சனை இல்லையா? குறிப்பாக, குஜராத் மாநிலத்தில் பாயும் நர்மதா நதியின் நர்மதா கட்டுப்பாட்டு ஆணையத்தை மத்திய அரசு ஏன் மத்திய நீர்வளத்துறையின் கீழ் கொண்டுவரவில்லை?

மத்தியில் ஆளும் பாஜக அரசு உடனடியாகக் காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டுவந்து தன்வயபடுத்தும் முயற்சியைக் கைவிட வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார் இது குறித்து தெரிவித்துள்ள அவர்,  கொரோனாவில் இருந்து மக்களை மீட்டெடுக்க உருப்படியான எந்தவொரு முயற்சியையும் இதுவரை எடுக்காத மத்திய அரசு ,  நோய்த்தொற்று அச்சத்தால் மக்களின் கவனம் திசைதிரும்பியுள்ள நேரத்தில் , எவ்விதப் போராட்டத்திலும் மக்கள் ஈடுபடமுடியாது என்ற எண்ணத்தில் தொடர்ந்து மக்கள் விரோத செயல்களைத் செய்து வருகிறது.  குறிப்பாக, மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் செயல்களை மிக நுணுக்கமாகத் திட்டமிட்டு அரங்கேற்றி வருகிறது. அதில் ஒன்றுதான், தற்போது காவிரி நதிநீர் மீதான தமிழக உரிமையைப் பறிக்கும் விதமாக இந்திய நீர்வளத்துறை திருத்த விதிகள் என்ற பெயரில் மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய நதிநீர்கட்டுப்பாட்டுவிதிகளாகும்.

 

முப்பதாண்டு காலம் தமிழகம் போராடியதன் விளைவாகக் கிடைத்த காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் என்னும் உரிமையை, ஒரே ஒரு திருத்தத்தின் மூலம் மத்திய அரசு தனது கட்டுப்பாட்டிற்குள் நீர்வளத்துறை அமைச்சகத்தின் மூலம் கொண்டு செல்ல முனைந்துள்ளது ஏற்றுக்கொள்ளவே முடியாத கொடுஞ்செயல். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கேற்ப தன்னாட்சி அமைப்பாக சுதந்திரமாகச் செயல்பட வேண்டிய காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல், பகுதி அளவே  சுதந்திரமாகச்  செயல்படக்கூடிய காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது ஆளும் பாஜக அரசு. இது காவிரி நதிநீர் உரிமையில் மத்திய அரசுகள் தமிழகத்திற்கு இழைத்த துரோகங்களின் தொடர்ச்சியாகும். தற்போது அந்தத் துரோக வரலாற்றின் நீட்சியாகக் காவிரி மேலாண்மை ஆணையத்தின் மீதமுள்ள தன்னாட்சித் தன்மையையும் தகர்த்து மத்திய அரசு தன்வயப்படுத்தியுள்ளது. இனி மத்தியில் ஆட்சிக்கு வரும் கட்சியின் முடிவுக்கு ஏற்பதான் தமிழகம் காவிரியில் தண்ணீர் பெறமுடியும். இதன் மூலம் காவிரி நதிநீரில் தமிழகத்திற்கு இருந்த சிறிதளவான உரிமையும் மொத்தமாகப் பறிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே, மாறி மாறி மத்திய, மாநில அரசுகளை அமைக்கும் கட்சிகளின் ஆட்சிகளைக் காப்பாற்ற ஆடிய அரசியல் கண்ணாமூச்சி ஆட்டத்தில் முப்பது ஆண்டுகாலமாக முடங்கிபோயிருந்த காவிரி நதிநீர் உரிமை கடந்த ஓரிரு ஆண்டுகளாகத்தான் ஓரளவாவது உரிமைக்குரல் எழுப்பக்கூடிய உறுப்பினர்களைக் கொண்ட அரசியலுக்கு அப்பாற்பட்ட சுதந்திர அமைப்பாக உருவாகியது.  தற்போது அந்த அமைப்பு மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செல்வதென்பது மீண்டும் மத்தியில் ஆட்சியமைக்கும் கட்சிகளின் அரசியல் சுய இலாபத் தேவைக்கேற்ப தமிழகத்தின் வாழ்வாதார நதிநீர் உரிமையைப் பறித்து வயிற்றிலடிக்க வழிவகுக்கும் செயலாகும். தென்னக நதிகளைத் தன்வயப்படுத்துவதில் காட்டும் ஆர்வத்தில் சிறிதளவேணும் வட இந்திய நதிகளைக் கைப்பற்றுவதில் மத்திய அரசு ஏன் காட்டவில்லை ? அங்கெல்லாம் நதிநீர் பிரச்சனை இல்லையா? குறிப்பாக, குஜராத் மாநிலத்தில் பாயும் நர்மதா நதியின் நர்மதா கட்டுப்பாட்டு ஆணையத்தை மத்திய அரசு ஏன் மத்திய நீர்வளத்துறையின் கீழ் கொண்டுவரவில்லை? ஆகவே, பாஜக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உள்ள மாநிலங்களுக்கு ஒரு நீதி! அதற்கு வாய்ப்பில்லாத இல்லாத மாநிலங்களுக்கும் அவர்களின் உரிமைகளுக்கும் ஒரு நீதி! என்று மத்திய அரசு பாரபட்சமாகச் செயல்படுகிறது. 

காவிரி நடுவர் மன்றம் அமைப்பதில் தொடங்கி, அதன் இடைக்கால , இறுதித் தீர்ப்புக்களை அரசிதழில் காலம்தாழ்த்தி வெளியிடுவது, செயல்படுத்துவது, மேலாண்மை வாரியம் அமைக்காமல் இழுத்தடித்துப் பின், மேலாண்மை ஆணையமாக மாற்றியது என ஏற்கனவே தமிழகத்திற்கு மத்திய அரசுகள் செய்த தொடர் துரோகத்தால் தமிழகக் காவிரிச் சமவெளி தன் வளத்தையும், பலத்தையும் பாதியாக இழந்து நிற்கிறது.  எனவே, மத்திய அரசு தன்னுடைய உத்தரவை திரும்பபெறாவிட்டால் காவிரிச் சமவெளிபகுதி மட்டுமின்றித் தமிழகம் முழுவதும் வரலாறு காணாத மக்கள் திரள் போராட்டத்தை மத்திய அரசு எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கிறேன். எனவே, மத்தியில் ஆளும் பாஜக அரசு உடனடியாகக் காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டுவந்து தன்வயபடுத்தும் முயற்சியைக் கைவிட வேண்டுமெனவும் , மாநிலத்தை ஆளும் அதிமுக அரசு அதற்குத் தேவையான அழுத்தத்தைக் கொடுக்கவேண்டுமெனவும் தேவைப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கவும் தயங்கக்கூடாது எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

click me!