
வரும் 21 ஆம் தேதி நடிகர் கமலஹாசன் தொடங்கவுள்ள புதிய கட்சி மற்றும் பெயர் அறிவித்தவுடன், ‛நாளை நமதே' என்ற பயணத் திட்டத்தை தொடங்கவுள்ளதாக ஆனந்தவிகடன் வார இதழில் எழுதியுள்ளார்.
அதிமுக ஆட்சி குறித்து நடிகர் கமலஹாசன் விமர்சனம் செய்து பேட்டி அளித்தபோது அதனை எதிர்த்து தமிழக அமைச்சர்கள் தாறுமாறாக பேட்டி கொடுத்தனர். இதையடுத்து அதிமுக – கமல் இடையே பெரும் வார்த்தைப் போர் மூண்டது.
நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து செய்து வந்த விமர்சனங்கள் அவர் விரைவில் அரசியலில் இறங்குவார் என்பதையே காட்டியது.சமூக ஆர்வலர்களும் கமலஹாசன் அரசியலில் குதிப்பார் என்றே கருத்துத் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த நவம்பர் 7 ஆம் தேதி தனது பிறந்தநாளில், நடிகர் கமல்ஹாசன் கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்து, முதல்கட்டமாக மையம் விசில் என்ற செயலி ஒன்றை அறிமுகப்படுத்தினார்.
இந்நிலையில், அடுத்தக் கட்டமாக தனது கட்சியின் பெயரை பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி அறிவிக்க உள்ளதாக நடிகர் கமலஹாசன் தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில் தனது சொந்த மாவட்டமான இராமநாதபுரத்தில் முதல்கட்ட சுற்றுப்பயணத்தைத் வரும் பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி தொடங்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இது என் நாடு..இதைத் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு மட்டுமல்ல நம் அனைவருக்கும் இருக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கமல் குறிப்பிட்டிருந்தார்.
இராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் வரும் பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி முதல் ராமநாதபுரத்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து அரசியல் பயணத்தை துவங்குகிறார்.
அன்று ராமநாதபுரத்தில் பொதுக்கூட்டம் நடத்தி அரசியல் கட்சி பெயரையும் அறிவிக்கவிருக்கிறார். தொடர்ந்து தமிழகம் முழுவதும் பயணம் செய்து மக்களை சந்திக்க உள்ளதாக கமல் ஆனந்தவிகடள் வார இதழில் தெரிவித்துள்ளார்.
இந்த பயணத்திட்டத்திற்கு ‛நாளை நமதே' என பெயரிடப்பட்டுள்ளதாகவும், இன்று யாருடையதாகவோ இருக்கும் தமிழகத்தை இனி நமதாக்குவதுதான் லட்சியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கிராமங்களை தத்தெடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளா கமல் இது குறித்து ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் பேச உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களை கிராமத்தை நோக்கி அழைத்து வர உள்ளதாகவும் கமலஹாசன் குறிப்பிட்டுள்ளார்