
தாம் ஏற்கனவே திமுகவில் இருப்பதாகவும், சினிமாவிற்கு வரும் முன் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தாகவும் தெரிவித்துள்ள உதயநிதி ஸ்டாலின், இனி அரசியலில் தீவிரமாக இறங்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின், இணைய தளம் உன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது திமுக தலைவர் கருணாநிதி, செயல் தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், முரசொலிமாறன் ஆகியோருக்காக வாக்கு சேகரித்துள்ளதாக தெரிவித்தார்.
சினிமாவில் நடிக்க ஆரம்பித்த பிறகு, அரசியலில் இருந்து சற்று விலகி இருந்ததாக குறிப்பிட்ட உதயநிதி, தற்போது பல நடிகர்கள் அரசியலுக்கு வரும் நிலையில் தானும் தீவிர அரசியலுக்கு வரும் நேரம் வந்துவிட்டதாக கருதுவதாக கூறினார்.
சில நாட்களுக்கு முன் அமைச்சர் ஜெயக்குமாரிடம் உதயநிதி ஸ்டாலினின் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானலும் அரசியலுக்கு வரலாம். அரசியல் என்பது ஒரு சமுத்திரம். இதில் எல்லோராலும் கரை சேர முடியாது. ஆனால் அதிமுக என்ற கப்பல் கரை சேர்ந்துவிட்டது. எனவே எந்த நிதியாக இருந்தாலும் நாங்கள் சமாளிப்போம். அந்த திராணி எங்களுக்கு உண்டு என்று ஜெயக்குமார் கூறினார்.
இதற்கு பதில் அளித்துள்ள உதயநிதி ஸ்டாலின், அரசியலுக்கு நான் ஏற்கனவே வந்துவிட்டேன், தொண்டர்களுடன் பயணிப்பதே எனது அரசியல் என தெரிவித்தார்.
எத்தனையோ நிதியை பார்த்துவிட்டோம் என கூறும் அமைச்சர் ஜெயக்குமார், தமிழக அரசு தற்போது ரூ.7 லட்சம் கோடி பற்றாக்குறையில் திண்டாடி வருகிறது என்றும் அந்த நிதியை மட்டும் அவர் பார்த்தால் போதும் என்றும் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்தார்