
அரசியலில் தனது இருப்பை வெளிப்படுத்திக் கொள்ள சிலர் ஷாக் ஸ்டேட்மெண்டுகளை தட்டிவிட்டு தன்னை பரபரப்பாக்கிக் கொள்வார்கள். தமிழக பி.ஜே.பி.யை பொறுத்தவரையில் ஹெச்.ராஜா இந்த கலையில் கில்லி என்று பொதுவான விமர்சனம் உண்டு.
ஆனால் அந்த சீனியர் பி.ஜே.பி. மனிதரை ஜூனியரான நயினார் நாகேந்திரன் முந்திவிட்டார் என்பதுதான் லேட்டஸ்ட் பரபரப்பு. ஆண்டாள் விஷயத்தில் வைரமுத்துக்கு எதிராக பாளையங்கோட்டையில் பி.ஜே.பி. நடத்திய கண்டன நிகழ்வு மேடையில் ’அன்னை ஆண்டாளை இழிவாக பேசிய வைரமுத்துவை கொலை செய்ய கூட தயாராக இருக்க வேண்டும். என்ன கொலை செய்யலாமா? கூடாதா?’ என்று இவர் கூட்டத்தினரை பார்த்து கேள்வி எழுப்ப, அவர்களும் ‘வைரமுத்துவின் தலையை துண்டாக எடுக்க வேண்டும்’ என்று ஆமோதித்துள்ளனர்.
அ.தி.மு.க.வில் இருக்கும்போது சாஃப்ட்வேராக இருந்த நயினார் இப்போது பி.ஜே.பி.யின் ஹார்டுவேராக மாறிப்போனதை பார்த்து ஹெச்.ராஜாவே அதிர்ந்துதான் போனார். தமிழக பி.ஜே.பி. தலைமையே நயினாரிடம் ‘சகோ, கொஞ்சம் பார்த்து பேசுங்க’ என்று அட்வைஸுமளவுக்கு அவரது பாளையங்கோட்டை பாய்ச்சல் இருந்தது.
இந்நிலையில் ‘ஏன் இப்படியெல்லாம் பேசினீர்கள்?’ என்று கேட்டதற்கு “அப்படி சொல்லலை. நான் சொன்னதை முழுசா கேட்டா உண்மை புரியும். அதாவது ‘ஆண்டாளை இழிவாக பேசிய வைரமுத்துவின் நாக்கை அறுத்து வாருங்கள், நயினார் நாகேந்திரன் பத்து லட்சம் ரூபாய் தருகிறேன்!’ என்று பேசினால், போலீஸ் என் மீது வழக்கு போடுமா போடாதா? அப்படியானால் ஆண்டாளை பழித்துப் பேசி ஒட்டுமொத்த உலக இந்துக்களின் மனதை வேதனைப்படுத்திய வைரமுத்துவின் மீது மட்டும் ஏன் வழக்கு போடவில்லை?’ என்றுதான் பேசினேன்.
வைரமுத்து இப்படி பேசியதன் பின்னணியில் தி.மு.க.தான் இருக்கிறது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சிறுபான்மை வாக்குகள் அப்படியே தினகரனுக்கு போய்விட்டன. இதனால் அதிர்ச்சியடைந்த தி.மு.க., இந்து மதத்தை பழித்துப் பேசி சிறுபான்மையினரை மீண்டும் தங்கள் பக்கம் இழுப்பதற்காக வைரமுத்துவை பயன்படுத்தியிருக்கிறது.” என்று கெத்தாக பேட்டி தட்டியிருக்கிறார்.
ஓஹோ!