நக்கீரன் இதழில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குறித்து அவதூறாக எழுதியதாக அதன் ஆசிரியர் நக்கீரன் கோபால் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார், அவரிடம் அங்கேயே வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தின் பிரபல புலனாய்வு இதழான நக்கீரனில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குறித்து தொடர்ந்து அவதூறு பரப்பப்பட்டு வருகிறது என புகார் எழுந்துள்ளது. மேலும் இது குறித்து ஆளுநர் மாளிகையில் இருந்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது இதையடுத்து போலீசார் அதிரடியாக களத்தில் இறங்கினர்.
இன்று அதிகாலை புனே செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு வந்த நக்கீரன் இதழ் ஆசிரியர் கோபாலை போலீசார் கைது செய்தனர். அவர் மீது என்ன பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை,
4 பேர் கொண்ட தனிப்படை போலீசார் நக்கீரன் கோபாலை கைது செய்து விமான நிலையத்தில் வைத்தே விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.