12 எம்.பி க்கள் சஸ்பெண்ட் விவகாரம்.. ஜனநாயக படுகொலை - சீமான் கண்டனம்

By Thanalakshmi VFirst Published Dec 1, 2021, 9:29 PM IST
Highlights

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் 12 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது ஜனநாயக படுகொலை என்றும்  கொடுங்கோல் சட்டங்களை அவசர அவசரமாக இயற்றி வரும் பாஜக அரசின் எதேச்சதிகாரப்போக்கு வன்மையானக் கண்டனத்திற்குரியது என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
 

கடந்த மழைக்கால கூட்டத் தொடரின்போது மாநிலங்களவையில் ரகளையில் ஈடுபட்டு, மேஜைகள் மீது ஏறி கோஷமிட்ட திரிணமுல் காங்கிரஸ், சிவசேனா, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட் கட்சிகளின் 12 எம்.பி.,க்களை, நடப்பு கூட்டத் தொடர் முழுதும் சஸ்பெண்ட் செய்து சபை தலைவரான குடியரசு துணைதலைவர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டார். இதனை ரத்து செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

கூட்டத்தொடரின் 3வது நாளான இன்றும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுப்பட்டதுடன் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.,க்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 12 எம்.பி.க்களின் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சியின் மல்லிகா அர்ஜுனா கார்கே, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு,  உள்பட பலர் பங்கேற்றனர்.  

இது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது  அறிக்கையில், “பாராளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நடவடிக்கைகளில் பங்கேற்கத் தடைவிதித்து, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 12 மாநிலங்களவை உறுப்பினர்களை இடைநீக்கம் செய்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. பாராளுமன்றத்தில் சட்டங்களை இயற்றும்போதும், அவற்றைத் திருத்தம் செய்யும்போதும் அதனை எவ்வித விவாதங்களுக்கும், தர்க்கங்களுக்கும் உட்படுத்தாது, மாற்றுக்கருத்துக்கே இடமுமளிக்காத வகையில் கொடுங்கோல் சட்டங்களை அவசர அவசரமாக இயற்றி வரும் பாஜக அரசின் எதேச்சதிகாரப்போக்கு வன்மையானக் கண்டனத்திற்குரியது.

இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் கொடுங்கோன்மை நடவடிக்கைகளையும், சட்டத்தின் வழியே நிகழ்த்தப்படும் அதிகார வல்லாண்மையையும், ஒற்றைமயத்தை நிலைநிறுத்தி, மக்களுக்கான ஆட்சி அதிகாரக்கட்டமைப்பு முறைகளை அவர்களுக்கெதிராகவே மாற்றும் வகையில் அடுக்கடுக்காக இயற்றப்படும் பல்வேறு சட்டங்களையும் எதிர்த்துக் குரலெழுப்பா வண்ணம் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகளை முடக்கி, அவர்களது குரல்வளையை நெரிப்பது மிகப்பெரும் சனநாயகப் படுகொலையாகும்.

இது அரும்பாடுபட்டு இரத்தம் சிந்தி, உயிரை விலையாகக் கொடுத்து, நூற்றாண்டுகாலம் போராடிப் பெற்றுத் தந்த விடுதலை எனும் மகத்துவமானக் கோட்பாட்டைக் குலைக்கும் கொடுஞ்செயலாகும்.” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மாநிலங்களவையில் 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். சஸ்பெண்ட் நடவடிக்கை பாராளுமன்றத்தின் ஜனநாயக மாண்பை குறைக்கும் செயல் என்று கூறிய அவர், சஸ்பெண்ட் நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடரிலே விவாதமின்றி இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்ட நிறைவேற்றபட்டது. தற்போது  குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வேளாண் சட்டங்கள் ரத்து மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளார் 

 

click me!