அற்ப அரசியலுக்காக இசுலாமியப்பெண்களின் உடை உரிமையை மறுப்பதா ? நாம் தமிழர் சீமான் ஆவேசம் !!

Published : Feb 09, 2022, 01:51 PM IST
அற்ப அரசியலுக்காக இசுலாமியப்பெண்களின் உடை உரிமையை மறுப்பதா ? நாம் தமிழர் சீமான் ஆவேசம் !!

சுருக்கம்

கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள குந்தாப்பூர் அரசு பியூ கல்லூரியில், ஹிஜாப் அணிந்துவந்த 6 இஸ்லாமிய மாணவிகள் வகுப்பறைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. 

`ஹிஜாப்' அணிவது அரசியலமைப்புச் சட்டம் எங்களுக்கு வழங்கிய உரிமை, எங்களை கல்லூரிக்குள் அனுமதிக்க வேண்டும் எனக்கூறி அந்த 6 மாணவிகளும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த டிசம்பர் மாதம் உடுப்பி மாவட்டத்தில் தொடங்கிய இந்த சர்ச்சை அடுத்தடுத்து சிக்மகளூர், விஜயபுரா, ஷிமோகா, பத்ராவதி என சுற்றுப்பகுதியில் உள்ள பல்வேறு கல்லூரிகளுக்குப் பரவியது. அங்கும் கல்லூரி நிர்வாகத்தால் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது.

இந்து மாணவர்களும் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்துவந்தால் அவர்களுக்கு எதிராக நாங்களும் காவி அணிவோம் என்றுகூறி கழுத்தில் காவி துண்டுடன் `ஜெய் ஶ்ரீராம்' கோஷமிட்டு கல்லூரிக்கு வரவும் விவகாரம் பெரிதானது. அதேசமயம் காவி துண்டு மாணவர்களுக்கு எதிராகவும், போராடும் இஸ்லாமிய மாணவர்களுக்கு ஆதரவாகவும் கழுத்தில் நீலத் துண்டுடன் சில மாணவர்களும் `ஜெய்பீம்' கோஷத்துடன் கல்லூரிக்கு வருகை தந்தனர். இதனால் படிக்கும் மாணவர்களுக்குகிடையே மத மோதல்கள் ஏற்படும் பதற்றமான சூழ்நிலை உருவாக்கி இருக்கிறது. இந்த பிரச்னை தற்போது தேசிய அளவில் பூதாகரமாக வெடித்துள்ளது.

‘அற்ப அரசியலுக்காக இசுலாமியப்பெண்களின் உடை உரிமையை மறுப்பதா ? மோடியின் ஆட்சியில் குஜராத்தில் நிகழ்த்தப்பட்ட இசுலாமிய மதவெறிப் படுகொலைகளை நாடு முழுமைக்கும் அரங்கேற்றத் துடிப்பதா’ என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கர்நாடக மாநிலத்தின் கல்விக்கூடங்களில் இசுலாமியப்பெண்கள் தங்களது மார்க்கத்தின்படி, உடை உடுத்தி வருவதற்கு எதிர்ப்புத்தெரிவித்து, கடந்த சில வாரங்களாக மதவெறி இந்துத்துவக்கும்பல் நிகழ்த்தி வரும் வன்முறை வெறியாட்டங்களும், பிரித்தாளும் சூழ்ச்சிகளும் அதிர்ச்சியளிக்கின்றன.

கல்விக்கொள்கையையும், தேர்வு முறையையும் காவிமயப்படுத்தும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு, தற்போது மாணவர்களின் மனங்களிலும் மதவாத நச்சுப்பரப்புரையை விதைத்து மதமோதலுக்கு வித்திடுவது கடும் கண்டனத்திற்குரியது. தங்களது அரசியல் ஆதாயத்திற்காகவும், தன்னலப்போக்குக்காகவும் மாணவர்கள் மத்தியில் மதவுணர்ச்சியைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் இந்துத்துவக்கூடாரத்தின் இழிஅரசியலை வன்மையாக எதிர்க்கிறேன்.

பன்மைத்துவத்தின் மூலம் உலகை ஈர்த்த இந்தியப் பெருநாட்டில் ஒற்றைத்தன்மையைப் புகுத்தி, மதத்தால் மக்களைப் பிளந்து பிரிக்க வழிவகை செய்திடும் பாஜகவின் செயல்பாடுகள் வெட்கக்கேடானது. வளர்ச்சியென்று வாய்கிழியப் பேசி ஆட்சியதிகாரத்திற்கு வந்துவிட்டு, மதவாதத்தைத் தூண்டிவிட்டு நாட்டைக் கூறுபோட நினைக்கும் பாஜகவின் ஆட்சியாளர்களும், ஆதரவாளர்களும்தான் இந்நாட்டின் உண்மையான தேசவிரோதிகள்; பிரிவினைவாதிகள். 

இந்நாட்டுக்குள்ளேயும், வெளியேயுமென பல்லாயிரக்கணக்கான பிரச்சினைகள் முற்றுமுழுதாகச் சூழ்ந்திருக்க அவற்றைத் தீர்ப்பதற்கும், போக்குவதற்குமாக வேலைசெய்யாது மதவாத அரசியலைக் கையிலெடுக்கும் பாஜகவின் செயல்பாடுகள் அருவருக்கத்தக்கது. வடகிழக்கில் அருணாச்சலப்பிரதேசத்திலும், தெற்கே இலங்கையிலுமென இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக சீனா நிலைகொண்டிருக்கிறது. இந்திய நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்தில் விழுந்துக்கிடக்கிறது. 

அசோகப்பேரரசர் நினைத்திருந்தால், தனது ஆட்சிக்காலத்தில் நாட்டு மக்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக பௌத்த மதத்திற்கு மாற்றியிருக்க முடியும். முகலாயர்களது ஆட்சியில் அவர்கள் நினைத்திருந்தால் இசுலாமிய மார்க்கத்தை நோக்கி மக்கள் அனைவரையும் தள்ளியிருக்க முடியும். ஆங்கிலேயர்கள் நினைத்திருந்தால் துப்பாக்கி முனையில் நாட்டு மக்களை கிருத்துவர்களாக மாற்றி நிறுத்தியிருக்க முடியும். ஆனால், அவர்கள் அவ்வாறு செய்ய முன்வரவில்லை.அரசர்கள் ஆளுகை செய்யும் மன்னராட்சியாக இருந்தாலும், படையெடுப்புகள் மூலம் நிலத்தை ஆக்கிரமித்த அந்நியர்கள் ஆட்சியாக இருந்தாலும், அடிமைப்படுத்தி ஆண்ட வெள்ளையர்கள் ஆட்சியாக இருந்தாலுமென எந்தக் காலக்கட்டத்திலும் மதத்தை முன்னிறுத்தி மக்களைத் துன்புறுத்தவுமில்லை.

மதத்தைத் தழுவக்கூறி, மக்களைக் கட்டாயப்படுத்தவுமில்லை; வழிபாட்டுத்தலங்கள் மீது தாக்குதல் தொடுத்து, மதக்கலவரங்களை மக்களிடையே உருவாக்க முனையவுமில்லை. இவ்வாறு ஆண்டாண்டு காலமாக இம்மண்ணில் இருந்த மதவுரிமையும், சகோதரத்துவ உணர்வும், சமூக நல்லிணக்கமும் எட்டு ஆண்டுகால பாஜகவின் ஆட்சிக்காலத்தில் முற்றாகக் குலைக்கப்பட்டு வருகிறது.

விரும்பிய மதத்தைத் தழுவதற்கும், அதுதொடர்பான வழிபாட்டு முறைகளை மேற்கொள்வதற்கும், அதுகுறித்தக் கருத்துப்பரவலைச் செய்வதற்குமான வாய்ப்பை இந்தியாவின் அரசியலமைப்புச் சாசனம் அடிப்படை உரிமையாக வரையறுத்து வழங்கியுள்ள நிலையில், அதற்கு நேர்மாறாக, இசுலாமியப் பெண்களின் உடைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதும், மதவாத அடையாளமானக் காவித்துண்டை அணிந்துக் கல்விக்கூடங்களுக்கு வருகைதருவதுமானப் போக்குகள் ஒருபோதும் ஏற்புடையதல்ல.

‘வெள்ளையர்களது ஆட்சிக்காலத்தில் அரசின் கொடுமைகளுக்கெதிராகப் போராடும் உரிமையையாவது கொடுத்தார்கள். விடுதலைபெற்ற நாட்டில் அந்த உரிமையும் பறிக்கப்பட்டுவிட்டது’ என்றார் தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள். அக்கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் மானுட உரிமைக்காகவும், மண்ணின் நலனுக்காகவும், மக்களின் நலவாழ்வுக்காகவுமாக அறவழியில் போராடும் மனித உரிமை ஆதரவாளர்களை, சனநாயகப்பற்றாளர்களை கடும் சட்டங்களின் கீழ் கைதுசெய்து, சிறையிலடைத்து கொடும் சித்திரவதை செய்கிறது பாசிச பாஜக அரசு.இத்தோடு, அண்டை மாநிலமான கர்நாடகாவில் நடைபெற்று வரும் மதவெறிச்செயல்கள் தமிழ்நாட்டிலும் தலைதூக்காது தடுக்க மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட்டு, இந்துத்துவக்கும்பலை இரும்புக்கரம் கொண்டு, சட்டத்தின் துணைநின்று ஒடுக்க வேண்டுமென தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்' என்று கூறி இருக்கிறார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!