
தமிழக அமைச்சர்கள் தங்களைப் புறக்கணிப்பதாகவும், அமைச்சர்கள் வருகை குறித்து எந்த தகவலும் தெரிவிப்பதில்லை என்றும் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் கன மழை பெய்து வருகிறது. இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளன. வெள்ளப் பாதிப்புகளை தமிழக அமைச்சர்களும், அதிகாரிகளும் ஆய்வு செய்து வருகின்றன. இந்த நிலையில், ஆய்வு செய்வது தொடர்பாக எந்த முன் அறிவிப்பும் தருவதில்லை என்று அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தர்மயுத்தம் தொடங்கிய ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக விசாரணை ஆணையத்தை அமைத்தார். பின்னர், துணை முதலமைச்சர் பதவியோடு நிதித்துறை உள்ளிட்ட முக்கியத் துறைகளையும் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார்.
ஆனாலும், தமிழக அரசில் எடுக்கப்படும் எந்த முடிவுகளையும் தங்களுக்குத் தெரிவிப்பதில்லை என்று மைத்ரேயன் எம்.பி. வருத்தம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மைத்ரேயன் தனது டுவிட்டர் பக்கத்தில், கடந்த ஒரு வாரமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பொதுமக்கள் பருவமழையினால் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர். அமைச்சர்களும் அதிகாரிகளும் தக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால், அமைச்சர்கள் வருகை குறித்து பொறுப்பாளர்கள் எந்தத் தகவலும் தருவதில்லை என்பது கழகத் தொண்டர்களின் ஆதங்கம். ஏன், எனக்கே எந்தத் தகவலும் இல்லை. தொண்டர்களுக்கு ஒரு வேண்டுகோள். அவரவர் தங்கள் பகுதிகளில் தங்களால் இயன்ற அளவு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யுங்கள். 'மக்களால் நாம், மக்களுக்காக நாம்' என்ற அம்மாவின் தாரக மந்திரத்தை மனதில் கொள்ளுங்கள். மக்கள் உங்களை அங்கீகரித்தால், இன்று உங்களைப் புறக்கணிப்பவர்கள் பிற்காலத்தில்
உங்களைத் தேடி வருவார்கள். மக்கள் பணியே மகேசன் பணி” என்று தெரிவித்துள்ளார்.
கட்சி மற்றும் ஆட்சி அதிகாரத்தில் இருந்து படிப்படியாக நம்மை ஒதுக்கி வைக்கும் வேலைகள் தொடங்கி விட்டதாக ஓ.பி.எஸ். முகாமில் இருந்து தற்போது குரல்கள் எழ தொடங்கி உள்ளன.