
சில சமயங்களில் தன் தலைவனின் பலத்தை எதிராளியின் ரியாக்ஷன் மூலமாகத்தான் அறிந்து கொள்வார்கள் படையினர். வயோதிக கருணாநிதியின் வீரியத்தை இன்று மோடி விசிட் மூலமாக உணர்ந்து புத்துணர்வு பெற்றிருக்கிறது தி.மு.க.
தினத்தந்தி நாளிதழின் பவளவிழாவில் பங்கேற்க சென்னை வந்த பாரத பிரதமர் மோடி, அப்படியே கோபாலபுரம் சென்று தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்திருக்கிறார். தமிழக அரசியலில் இது ஒரு முக்கியமான நிகழ்வு. காரணம், அரசியல் சித்தாந்தங்கள் மற்றும் தத்துவார்த்த ரீதியில் மிக மிக ஆக்ரோஷமாக மோதிக் கொண்டிருக்கின்றன தி.மு.க.வும், பி.ஜே.பி.யும். சில மாதங்களுக்கு முன் நடந்த முரசொலி பவளவிழா மாநாட்டிற்கு திரிணமுல் காங்கிரஸை கூட அழைத்த ஸ்டாலின் தேசத்தை ஆளும் பி.ஜே.பி.யை சம்பிரதாயத்துக்கு கூட அழைக்கவில்லை. அதேபோல் விவசாயிகள் பிரச்னை தொடர்பாக கோரிக்கை வைக்க பல முறை முயன்ற ஸ்டாலினுக்கு மோடியும் நேரம் தரவில்லை.
இந்நிலையில் தமிழகத்தில் பெரும்பான்மையை இழந்த எடப்பாடியாரின் அரசை பி.ஜே.பி. தன் சுயலாபத்துக்காக கொண்டு செலுத்தி காப்பாற்றுகிறது என்று மக்கள் மன்றத்தில் மடேர் மடேர்! என அடித்துச் சொல்லிக் கொண்டிருக்கிறது ஸ்டாலின் டீம்.
இப்படியொரு சென்சிடீவான சூழலில் மோடி கோபாலபுரமே சென்று கருணாநிதியை சந்தித்ததை ‘நோய்வாய்ப் பட்டிருந்த மூத்த அரசியல்வாதியை மரியாதை மற்றும் நல்லெண்ண ரீதியில் பிரதமர் சந்தித்தார்.’ என்று பி.ஜே.பி. சொன்னாலும் கூட இதற்குப் பின் வலுவான சில அரசியல் காரணங்கள் இருக்கின்றன என்கிறார்கள் பார்வையாளர்கள்.
அவற்றில் சிலவாக அவர்கள் அடுக்குபவை...
* ஆளும் அ.தி.மு.க. அரசு மக்கள் மன்றத்தில் தார்மீக நம்பிக்கையை இழந்திருக்கிறது. அவ்வரசை தாங்கிப் பிடிக்கிறது எனும் விமர்சன அடிப்படையில் பி.ஜே.பி. மீதும் மக்கள் வெறுப்பை கொட்ட துவங்கியிருக்கிறார்கள். இப்படி அடித்து வீசும் காற்றை சற்றே களைக்க வேண்டிய பொறுப்பு பி.ஜே.பி.யின் சுப்ரிமோ எனும் வகையில் நமோவுக்கு இருக்கிறது.
* தமிழகத்தை பொறுத்தவரையில் நான் பொது நபர்! பன்னீரை எனக்கு மிக நெருக்கத்தில் வைத்துள்ளேன், எடப்பாடியை எங்களுக்காக பயன்படுத்துகிறேன் என்பதெல்லாம் கட்டுக்கதை, கருணாநிதியும் எனக்கு நண்பரே என்று தமிழகத்துக்கு காட்ட வேண்டிய கட்டாயம் மோடிக்கு வந்திருக்கிறது.
* இந்த விசிட்டின் மூலமாக அ.தி.மு.க. மற்றும் பி.ஜே.பி.யை இந்துத்வ கூட்டியக்கங்களாக்கி அலுங்காமல் திராவிட பாரம்பரிய வாக்குகளை வளைக்க துடிக்கும் தி.மு.க.வின் செயலுக்கு செக் வைத்தது போலாச்சு.
* மிக மோசமான விமர்சனங்களுக்கு ஆளாகிக் கொண்டிருந்தாலும், மத்திய அரசு தங்களைக் காப்பாற்றும் எனும் கெத்தில் இருக்கும் தமிழக அரசுக்கு ஒரு மாரல் ஃபியரை ஏற்படுத்துவதும் இந்த விசிட்டின் நோக்கம்!
- என்று பட்டியலிடுகிறார்கள்.
எது எப்படியோ மோடி வந்து கருணாநிதியின் கரங்களைப் பற்றி உடல் நலம் விசாரித்து, ‘ஓய்வெடுக்க டெல்லிக்கு வாருங்கள்’ என்று வரவேற்று, கருணாநிதி தந்த ‘முரசொலி பவள விழா மலரை’ பெற்று, தயாளு அம்மாவையும் சந்தித்துவிட்டு, ஸ்டாலின் - கனிமொழி என இரு துருவங்களையும் ஒரே நேர்கோட்டில் நிறுத்தி வாழ்த்திவிட்டு நகர்ந்திருக்கிறார் மோடி.
ஆனால் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களைப் பொறுத்தவரையில் பிரதமரின் இந்த விசிட் ‘கருணாநிதி’ எனும் ஆளுமைக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கிறார்கள் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
இதுபற்றி பேசும் அவர்கள் ‘தங்கள் தலைவர் உடல் நலன் வெகுவாக குன்றியிருந்த சமயங்களில் பல முறை மோடி பல முறை சென்னை வந்திருக்கிறார். ஆனால் அப்போதெல்லாம் இங்கே வந்து பார்க்காதவர், அவர் இப்போது வெகுவாக உடல் நலன் தேறியதும் பார்க்க வருகிறார் என்றால் அதுதான் கருணாநிதியின் அரசியல் அதிகாரம்.
நாங்கள் அஞ்சுவது ஸ்டாலினுக்கு அல்ல, கருணாநிதிக்கே என்பதை ஸ்டாலினுக்கு புரிய வைக்கவே, உடல் நிலை தேறிய கருணாநிதியை மோடி வந்து பார்த்திருக்கிறார். தங்களின் அரசியல் எதிரி கருணாநிதியேதான் என்பதை நிரூபிக்கவே அவர் வந்திருப்பதாக கருணாநிதியுடன் பணியாற்றிய தி.மு.க. சீனியர்கள் நினைக்கிறார்கள். எதிரியை ஏன் வீட்டில் வந்து சந்திக்க வேண்டும்? என்கிற கேள்வி எழலாம். காங்கிரஸ் எனும் வார்த்தையை பி.ஜே.பி.க்கு அலர்ஜிதான், வெறுப்புதான். ஆனாலும் சக மனிதர்களாக சோனியாவும், மோடியும், ராகுலும், அத்வானியும் அளவளாவிக் கொள்வது வட இந்தியாவில் இயல்புதானே! அன்று கருணாநிதியை ஹெச் ராஜா சந்தித்ததும், ஜெயலலிதாவை காண ஸ்டாலின் அப்பல்லோ சென்றதும் இந்த ரகம்தானே! என நினைக்கிறார்கள்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல் போன்றவை வந்தால் நிச்சயம் கருணாநிதியை காட்சி தலைவனாகவாவது அழைத்து வந்து வாக்குகளை அந்த கட்சி வளைக்க முயலும் என்பது பி.ஜே.பி.க்கு தெரியும். அதனால்தான் அதற்கு முன் இந்த நட்பு முக ஏற்பாடு. இதன் மூலம் தி.மு.க.வுடன் பி.ஜே.பி. கூட்டணி வைக்கும் என்று அர்த்தமல்ல. ஆனால் தாங்கள் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கும் அ.தி.மு.க. அரசுக்கு மட்டுமல்ல தி.மு.க.வுக்கும் பொதுவான நண்பரே...என்று மக்கள் மன்றத்தில் காண்பித்து தன்னை தப்பிக்க வைக்கும் முயற்சியே இது என்று தி.மு.க.வினர் நினைக்கிறார்கள்.
அதேநேரத்தில் இன்று கருணாநிதி தன் இல்லத்தின் உள் வாயில் வரை வந்து தொண்டர்களைப் பார்த்து கையசைத்ததன் மூலம் அவர் எந்தளவுக்கு உடல்நலன் தேறி எழுந்திருக்கிறார் என்பது புலனாகிறது. இந்த தேற்றம் இன்னும் அதிகமாகிக் கொண்டே போனால் நிச்சயம் அவர் அரசியல் பணிகளுக்குள் மெல்ல இயங்க ஆரம்பிப்பார். இதன் மூலம் ‘ஜெயலலிதா மறைவுக்கு பின்னான சூழலில் கருணாநிதி ஆக்டீவாக இருந்திருந்தால் தமிழகத்தில் அரசியல் சூழல் வேறு மாதிரி இருந்திருக்கும்.’ என்று பேசப்படும் விஷயத்திற்கான தெளிவுரை விளங்கும்...என்றும் முடிக்கிறார்கள்.
பாலிடிக்ஸ்னா சும்மாவா?