
சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று காலை ஒரே பரபரப்பு தான். காரணம் கமல் விவகாரம்தான்!
இந்துக்களில் தீவிரவாதிகள் உள்ளனர் என்று கூறிய நடிகர் கமலஹாசனுக்கு எதிர்ப்புக் குரல் பலமாக எழுந்து வருகிறது. அதே நேரம் ஆதரவாகவும் பலர் கருத்து கூறி வருகின்றனர். இந்நிலையில், கமலுக்கு எதிராக அவர் போன்றவர்கள் தூக்கிலிடப் பட வேண்டும் அல்லது சுட்டுக் கொல்லப்பட வேண்டும் என்று வடக்கே ஒரு தலைவர் கருத்து தெரிவித்தார். தமிழகத்திலும் பெரும் எதிர்ப்புக் குரல் எழுந்தது. அதே நேரம், கமலுக்கு ஆதரவாகவும் பலர் இயங்கினர்.
இந்நிலையில், நடிகர் கமலுக்கு ஆதரவாகவும் எதிராகவும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று காலை மனு அளிக்கக் குவிந்தனர் இரு தரப்பினர். அதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பல தரப்பில் இருந்தும் மிரட்டல் இருப்பதால், நடிகர் கமலுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரி பால் முகவர்கள் சங்கத்தைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவர் தனது ஆதரவாளர்களுடன் இன்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
அதே போல், நடிகர் கமலுக்கு எதிராக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சிவசேனா அமைப்பினர் புகார் ஒன்றை அளித்தனர். இதனால் சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.