
தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலைகுறித்து அந்தக் கட்சியின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன், தன் ஃபேஸ்புக் பக்கத்தில் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.
கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார்.
இந்நிலையில் கருணாநிதியின் 60 ஆண்டு கால சட்டப்பேரவை வைர விழா மற்றும் 94-வது ஆண்டு பிறந்தநாள் விழாவை வரும் 3 ஆம் தேதி பிரமாண்டமாகக் கொண்டாட தி.மு.க ஏற்பாடு செய்துவருகிறது.
உடல்நிலை காரணமாக இந்த விழாவில் கருணாநிதி கலந்துகொள்ள மாட்டார் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த நிலையில், கருணாநிதியின் உடல்நிலைகுறித்து துரைமுருகன் தனது ஃபேஸ்புக்கில் உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் தொண்டைக்குழி வழியாக குழாயை உள்ளே செலுத்தி அடிக்கடி சளி எடுக்க வேண்டி இருப்பதால்,தலைவரால் பேச இயலவில்லை... கடந்த இரு நாட்களுக்கு முன், குழாயை எடுத்துவிட்டு துவாரத்தையும் அடைத்துவிட்டு பேசச் சொன்னார்கள்.
தலைவரிடம் உங்கள் பெயர் என்ன எனக் கேட்க, "என் பெயர் கருணாநிதி'' என்றார்... அடுத்ததாக, உங்களுக்கு யாரைப்பிடிக்கும் எனக்கேட்க, ''அறிஞர் அண்ணா'' என்றார்... பின்னர் என்னை யார் எனக்கேட்க, "துரை'' என்றதும், என் கண்கள் கசிந்தன... மீண்டு_வருவார்_என் தலைவர்... " என்று நெஞ்சம் நெகிழ தனது முகப் புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்..