மாதம் மாதம் எனக்கு பிறந்தநாள்... வித்தியாசமா யோசிச்ச உதயநிதி..மேடையில் மாஸ்..

By Ezhilarasan BabuFirst Published Nov 27, 2021, 11:10 AM IST
Highlights

அதனால் வந்து இருக்கிறேன், என்னுடைய ஆசை மாதம் மாதம் எனக்கு பிறந்தநாள் வர வேண்டும் என்பதுதான், அப்போதுதான் பொது மக்களுக்கு நான் நலத்திட்ட உதவிகள் அளிக்க முடியும் என்ற ஆசை எனக்கு உள்ளது என அவர் கூறினார். 

எனக்கு மாதமாதம் பிறந்தநாள் வரவேண்டும் அப்போது தான் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் அளிக்க முடியும் என தனக்குள் ஆசை இருக்கிறதென உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 44வது பிறந்தநாள் இன்று. அவரது பிறந்தநாள் திமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆனால் இந்த முறை வெகு விமர்சையாக கொண்டாட திமுக இளைஞர் அணியினர் திட்டமிட்டிருந்த நிலையில், அக்கட்சியின் இளைஞரணி தலைமையகமான அன்பகத்திலிருந்து தற்போதுள்ள சூழ்நிலையில் பேனர், கட்டவுட் வைத்து அரசியலில் சிக்கலை ஏற்படுத்தி விட வேண்டாம் என தீடீர் உத்தரவு வெளியானதுடன்,  மாறாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கலாம் எனவும் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இது உதயநிதி ஸ்டாலின் பிறந்த  நாள் விழாவை தடபுடலாக கொண்டாட திட்டமிட்டிருந்த இளைஞர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இதேபோல் அமைச்சர்கள் தலைமையில் ஒவ்வொரு தொகுதியிலும் உதய் பிறந்தநாள் விழாவை கொண்டாட ஏற்கனவே ஆலோசிக்கப்பட்டு இருந்த நிலையில் அனைத்து திட்டங்களும் அப்படியே நிறுத்தப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியாக மாற்றப்பட்டுள்ளது.

நடிகர் டூ அரசியல்...

கலைஞரின் பேரனாகவும், ஸ்டாலினின் புதல்வராக இருந்தாலும் கூட ஒரு கட்டம்வரை திரைப்படத்தில் நடிப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டி வந்த உதயநிதி கடந்த 2018 மார்ச் மாதம் திடீரென தீவிர அரசியலில் குதித்தார். ஸ்டாலின் மகனாக அல்ல.. அவரின் அரசியல் வாரிசாக வரவில்லை, தொண்டர்களோடு தொண்டர்களாக இருக்க வருகிறேன் என அவர் இட்ட பதிவு பலரையும் கவர்ந்தது. பதவிக்காக, அரசியலுக்காக வரவில்லை, திமுகவின் கடைக்கோடி தொண்டனாக இருக்க விரும்புகிறேன். இனி அடிக்கடி என்னை திமுக மேடைகளில் காணலாம் என அவர் கூறினார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதே 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி திமுக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டார். முதலில் பதவி வேண்டாம் என மறுத்த அவர், பின்னர் தொண்டர்களின் அன்புக்கும் ஆதரவுக்காக மட்டுமே பதவி ஏற்றுக் கொண்டதாகக் கூறினார். அதைத் தொடர்ந்து 2021 சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வரலாறு காணாத அளவிற்கு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார்.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினுக்கு அடுத்த நிலையில் செல்வாக்கு மிகுந்த சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். அவரின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிராட்வே பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளி ஒன்றில் துறைமுகம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சருமான சேகர்பாபு ஏற்பாட்டில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 3 ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி,போர்வை , பாய் அடங்கிய 10 பொருட்கள் தொகுப்பினை திமுக இளைஞரணி செயலாளர் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் மூலம் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு வழங்கினார். அப்போது மேடையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், பல்வேறு நிர்வாகிகள் என்னை தொடர்பு கொண்டு என்னுடைய பிறந்தநாள் நிகச்சிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வரவேண்டும் என அழைத்தார்கள். ஆனால் அனைவரிடமும் என்னுடைய பிறந்தநாளுக்கு நானே எப்படி நலத்திட்டம் வழங்குவது எனக்கூறி தவிர்த்து விட்டேன். ஆனால் சேகர்பாபு அண்ணனிடம் அவ்வாறு கூற இயலாது. அவர் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்.

அதனால் வந்து இருக்கிறேன், என்னுடைய ஆசை மாதம் மாதம் எனக்கு பிறந்தநாள் வர வேண்டும் என்பதுதான், அப்போதுதான் பொது மக்களுக்கு நான் நலத்திட்ட உதவிகள் அளிக்க முடியும் என்ற ஆசை எனக்கு உள்ளது என அவர் கூறினார். அவரின் பேச்சை அங்கிருந்த பலரும் உற்சாகத்துடன் கைதட்டி வரவேற்றனர். தொடர்ந்து பேசிய அவர், சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது இந்த தொகுதிக்கு வந்து சேகர்பாபு அவர்களை ஆதரித்து ஐந்து இடங்களில் வாக்கு கேட்டேன், இப்போது இது நன்றி அறிவிப்பு கூட்டம் போல உள்ளது. 35 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அவரை வெற்றி பெற வைத்தீர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். இதேபோல்,சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற மற்றொரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின், உயர்கல்வி பயிலும் 1200 மாணவ, மாணவிகளுக்கு  கல்வி ஊக்கத்தொகை, மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கினார். 
 

click me!