‘முத்தலாக்’ மசோதா தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும்...வெங்கையா நாயுடுவிடம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

First Published Jan 2, 2018, 9:59 PM IST
Highlights
Muthalak to submit to Mudalak Committee Opposition parties including Congress

மக்களவையில் நிறைவேற்றப்பட்ட முஸ்லிம் பெண்கள் திருமணப்பாதுகாப்புச் சட்டம், அல்லது முத்தலாக் தடைச் சட்டத்தை நாடாளுமன்றத் தேர்வுக்குழுவுக்கு அனுப்ப காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

முஸ்லிம் மதத்தில் பெண்களுக்கு விவாகரத்து அளிக்கப் பின்பற்றப்படும் ‘உடனடி முத்தலாக்’ நடைமுறை சட்டவிரோதமானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், அடுத்த 6 மாதங்களுக்குள் மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என உத்தரவிட்டது.

நிறைவேற்றம்

இதைத் தொடர்ந்து கடந்த மாதம் 28-ந்தேதி முஸ்லிம் பெண்கள் திருமணப் பாதுகாப்பு சட்ட மசோதாவை மக்களவையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தாக்கல் செய்தார். இந்த மசோதாவில் உடனடி முத்தலாக் கொடுக்கும் ஆணுக்கு 3 ஆண்டுகள் சிறையும், அபராதமும் விதிக்க வகை செய்யப்பட்டது.

3 ஆண்டு சிறை

முத்தலாக் தடைச் சட்ட மசோதாவுக்கு முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்த போதிலும், 3 ஆண்டுகள் சிறை என்ற அம்சம் உள்ளி்ட்ட சில கூறுகளை ஏற்கத் தயாராக இல்லை. ஆனாலும், மக்களவையில் பெரும்பான்மை பலத்தால், எதிர்ப்புக்கு மத்தியில், மத்திய அரசு மக்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்றியது.

எதிர்ப்பு

இந்நிலையில் முத்தலாக் தடைச்சட்ட மசோதாவை மாநிலங்கள் அளையில் மத்திய அரசு இன்று தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது. ஏற்கனவே மக்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்த நிலையில், மாநிலங்கள் அவையிலும் எதிர்ப்பு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பா.ஜனதா நம்பிக்கை

ஆனால், முத்தலாக் தடைச் சட்ட மசோதா தொடர்பாக முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியிடம் கலந்து பேசிவிட்டதால், மாநிலங்கள் அளையில் எளிதாக நிறைவேற்றுவோம் என பாஜனதா கட்சி வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.

நிறைவேறும்

இது குறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்த குமார் நேற்று நாடாளுமன்றத்துக்கு வெளியே நிருபர்களிடம் கூறுகையில், “ முத்தலாக் தடை மசோதா தொடர்பாக காங்கிரஸ் கட்சியுடன் பேசி வருகிறோம், மாநிலங்கள் அவையில் எளிதாக நிறைவேறும் என நம்புகிறோம். நாளை இந்த மசோதா தாக்கல் செய்யப்படும்’’ எனத் தெரிவித்தார்.

ஆலோசனை

இதற்கிடையே முத்தலாக் தடை மசோதாவில் திருத்தங்கள் கொண்டு வருவதா? அல்லது விரிவான ஆலோசனைக்காக தேர்வுக்குழுவுக்கு அனுப்பப்படுமா? என எதிர்க்கட்சிகள் நேற்று விவாதித்தன.

வலியுறுத்தல்

அதன்பின், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தி.மு.க.சமாஜ்வாதி கட்சி, பிஜு ஜனதா தளம், அ.தி.மு.க., ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்று மாநிலங்கள் அவைத் தலைவர் எம். வெங்கையா நாயுடுவைச் சந்தித்தனர். அப்போது, முத்தலாக் தடைச் சட்ட மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர். அப்போது அரசின் தரப்பில் மத்திய அமைச்சர் விஜய் கோயல் உடன் இருந்தார்.

தேர்வுக்குழு

இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி. ராஜா கூறுகையில், “ முத்தலாக் தடை சட்ட மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப கோரியுள்ளோம். ஆனால், இந்த மசோதாவை தீவிரமாக ஆலோசனை நடத்த, மத்திய அரசு தடை செய்து வருகிறது.

மாற்றுவழியில்

மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு, தேர்வுக்குழு என்ற அம்சத்தை மீறி மாற்று வழியில் நிறைவேற்ற முயற்சிக்கிறது. தேர்வுக்குழுவுக்கு முத்தலாக் தடை சட்ட மசோதாவை அனுப்பத் தேவையில்லை என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. மாநிலங்கள் அவையில் மசோதா தாக்கல் செய்யும் போது, அதை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப நாங்கள் வலியுறுத்துவோம்’’ எனத் தெரிவித்தார்.

click me!