முத்தலாக் தடை சட்டம் ! மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேறியது!!

By Selvanayagam PFirst Published Jul 30, 2019, 8:38 PM IST
Highlights

முத்தலாக்  தடை மசோதா மாநிலங்களவையில் 99 உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேறியது. எதிராக 84 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

மக்களவையில் நிறைவேற்றப்பட்ட முத்தலாக் தடை மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவையில்  இன்று தாக்கல் செய்தார். அப்போதே அதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். ரவிசங்கர் பிரசாத் பேசும்போது, இந்த விவகாரத்தை வாக்கு வங்கி அரசியலாக பார்க்க வேண்டாம். இது மனிதநேயம் சார்ந்தது என்று குறிப்பிட்டார்.

விவாதத்தில் அதிமுக சார்பில் பேசிய எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், முத்தலாக் மசோதாவை கடுமையாக எதிர்த்ததோடு, அதனை நாடாளுமன்ற தேர்வுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து பேசிய மாநிலங்களவை குழு அதிமுக தலைவர் நவநீதகிருஷ்ணனும் முத்தலாக் மசோதாவை கடுமையாக எதிர்த்தார்.

மத்திய அரசு கொண்டுவரும் முத்தலாக் மசோதா, இஸ்லாமியர்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ளது. முத்தலாக் நடைமுறையில் உள்ளதாக மசோதாவில் கூறப்பட்டுள்ளது. ஆனால் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே முத்தலாக்கிற்கு தடை விதித்துவிட்டது.

தற்போது அது நடைமுறையில் இல்லை.முஸ்லீம் ஷரியத் சட்டத்தில் முத்தலாக் நடைமுறைக்கு அங்கீகாரம் இல்லை. ஆக வழக்கத்தில் இல்லாத முத்தலாக் குற்றம் என்று நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற முடியாது. ஆகவே மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன் என தெரிவித்தார்.

இதனை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பக் கோரிக்கை விடுக்கிறேன்” என்று ஆவேசமாக பேசினார். முன்னதாக மக்களவையில் முத்தலாக் மசோதாவை அதிமுக உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் ஆதரித்திருந்த நிலையில், ராஜ்யசபாவில் எதிர்த்தது முக்கியமானதாக பார்க்கப்பட்டது.

இதே போல் திமுக, காங்கிரஸ், இடதுசாரிகளும் மசோதாவை கடுமையாக எதிர்த்தன. விவாதத்திற்குப் பிறகு நடந்த வாக்கெடுப்பை ஐக்கிய ஜனதா தளம், அதிமுக கட்சிகள் புறக்கணித்தன. வாக்கெடுப்பின் முடிவில் மசோதாவுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 84 வாக்குகளும் பதிவானதால் மசோதா நிறைவேறியதாக ராஜ்யசபா தலைவர் வெங்கைய்ய நாயுடு அறிவித்தார். இரு அவைகளிலும் நிறைவேறிவிட்ட நிலையில், குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்தவுடன் முத்தலாக் சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.

click me!