பேரறிவாளன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 பேர் விடுதலை ?  27 ஆண்டுகள் சிறை வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா ?

 
Published : Jun 12, 2018, 06:35 AM ISTUpdated : Sep 19, 2018, 02:30 AM IST
பேரறிவாளன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 பேர் விடுதலை ?  27 ஆண்டுகள் சிறை வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா ?

சுருக்கம்

Murugan shanthan nalini will be released from prison

ராஜிவ்காந்தி  கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் பேரறிவாளன்,நளினி முருகன் உட்பட 7 பேரின் ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு  தமிழக அரசுக்கு  மத்திய அரசு கடிதம் எழுதி இருப்பதால் அவர்கள் விரைவில்  விடுதலை  செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ந் தேதி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் படுகொலை செய்யப்பட்டார்.



இந்த வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனையும், நளினி உள்ளிட்ட மற்ற 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரும் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார் கள். இந்த கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க காலதாமதம் ஏற்பட்டதாக கூறி, அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து 2014-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் இந்த 3 பேரையும் விடுதலை செய்வது குறித்து உரிய அரசு முடிவு எடுக்கலாம் என்றும் கூறியது.

இதைத்தொடர்ந்து முருகன், சாந்தன், பேரறிவாளன் மட்டுமின்றி இந்த வழக்கில் ஏற்கனவே ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோரையும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்தது.

தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு, சுப்ரீம் கோர்ட்டில் ‘ரிட்’ மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, 7 பேரையும் விடுதலை செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. அதன்பிறகு இந்த வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட அரசியல் சாசன அமர்வு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மறுஆய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தது.

இதற்கிடையே, தாங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளதால் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளித்தனர். மேலும், தன்னை விடுவிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் நளினி ஒரு மனு தாக்கல் செய்தார்.

இதனையடுத்து, அவர்களது கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு, அவர்கள் அனைவரும் 24 ஆண்டுகளாக சிறையில் உள்ள காரணத்தால், அவர்களை விடுதலை செய்ய முடிவு செய்து, அதற்கு மத்திய அரசின் ஒப்புதல் கோரி கடந்த 2016-ம் ஆண்டு 2 கடிதங்கள் எழுதியது. ஆனால் அதற்கு மத்திய அரசு பதில் தரவில்லை.

இதற்கிடையே, தமிழக அரசு ஏற்கனவே தாக்கல் செய்திருந்த மறுஆய்வு மனு மீதான விசாரணையில், 7 குற்றவாளிகளையும் விடுவிப்பது குறித்து மத்திய அரசின் கருத்தை 3 மாதங்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

இதைத்தொடர்ந்து, தற்போது சிறையில் உள்ள கைதிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரின் உடல் ஆரோக்கியநிலை, மனநிலை, பொருளாதார பின்னணி, சமூக பின்னணி, குடும்பச் சூழல், அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை விவரம் மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அனுப்பி வைக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியது.



மத்திய அரசின் அந்த கடிதத்துக்கு தமிழக அரசு உரிய பதிலை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

ராஜீவ்காந்தி கொலை கைதிகள் பற்றி மத்திய அரசு கேட்டுள்ள விவரங்கள் மற்றும் ஆவணங்களை தமிழக அரசு ஏற்கனவே அனுப்பி உள்ள நிலையில், அவர்களின் விடுதலை குறித்து மத்திய அரசு சட்டரீதியாக ஆலோசித்து வருவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றிய மத்திய அரசின் முடிவு விரைவில் சுப்ரீம் கோர்ட்டுக்கு தெரிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதனால் சிறையில் இருக்கும் நளினி உள்ளிட்ட 7 பேரும் விடுதலையாக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. 27 ஆண்டு சிறை தண்டனைக்கு விரைவில் ஒரு முடிவு கிடைக்கும் என தெரிகிறது.,

PREV
click me!

Recommended Stories

இந்த மூன்று நாடுகளின் ஜனாதிபதிகளைக் கொல்ல துடிக்கும் அமெரிக்கா..? டிரம்பின் சதித் திட்டம்..!
அப்போ எல்லாமே வதந்தி தானா.. போட்டி போட்டு மறுத்த டிடிவி தினகரன், தமிழிசை.. என்ன விஷயம்?