’கிழப்புலி... ரிப்பேரான சிஸ்டம்...’ரஜினியை கதற விடும் முரசொலி..!

By Thiraviaraj RMFirst Published Nov 11, 2019, 5:10 PM IST
Highlights

அரசியல் வெற்றிடம்  ஏற்பட்டுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியதற்கு திமுகவின் முரசொலி நாளேட்டில் கடுமையான விமர்சனம் முன் வைக்கப்பட்டுள்ளது. 

முரசொலி நாளிதழில், ’’உலகில் அரசியல் தோன்றியதில் இருந்து  அதன் ஆளுமை என்றும் வெற்றிடமாக இருந்தது இல்லை. இருப்பதும் இல்லை.  ஏதாவது ஒருவகையில் நிரப்பப்பட்டு விடும். அது நிரப்ப்படும்  களம், தன்மை, வேறுபாடு பழமை அந்த ஆளுமையின் செயல் பண்பை வெளிப்படுத்தும். அதுவே அந்தந்த நாட்டு மக்களின் நலனுக்கான நடவடிக்கைகளாக இருக்கும். 

நலனுக்கான நடவடிக்கைகளை  மேற்கொள்ள பல ஆளுமைகள் வரலாம். சில பொது ஆளுமைகள் முழுமையில்லாமல் பகுதி ஆளுமைகள் அதிகாரத்திற்கு வந்து விடுவர். மக்கள் செல்வாக்கு அதற்கு அடிப்படையாக அமைந்து விடும். இதனால் புதிர்மிக்க ஆளுமைகள் அரசியலில் தோன்றி விடுவர்.  அவர்கள் அதிகாரத்திற்கு வந்து விடுவர். அவர்களின் கட்சி வழித்தோன்றல்களும் அரசியல் ஆளுமைகள் ஆகி விடுவர். அதனால் நிஜ ஆளுமைகள் நிழல் ஆளுமைகளோடு தொடர்ந்து போராட்டிக் கொண்டே இருக்கின்றன. அரசியல் சமூக பலவீனங்களால் நிழல் ஆளுமைகளை கணக்கிலெடுத்து கொண்டு போலி ஆளுமைகளும் தோன்றி விமர்சிக்க தொடங்கி விடுகின்றன. 

நிஜமாகி இருக்கிற ஆளுமையை இது ஆளுமை இல்லை என்று சொல்வதோடு நிழலையும் சேர்த்து போலி ஆளுமை தமிழ்நாட்டில் வெற்றிடமே இருக்கிறது. ஆளுமைகளே இல்லை என்று சொல்கிறது. நடக்க முடியாத கிழப்புலி பொன்னால் செய்யப்பட்ட காப்பை காட்டி பிராமணனை அழைத்த கதையைப் போல இருக்கிறது இது. 

அந்தப்போலி ஆளுமை துறவி கூட இல்லை. அது மிக உயர்ந்த சொல். எல்லாவற்றையும் அனுபவித்துவிட்டு  ஆண்டி போல் தன்னைக் காட்டிக் கொள்வது, ஞானமார்க்கத்தைப் பற்றி பேசுவது, ஆன்மிக அரசியல் எனப்பிறரை பேசச்செய்வது, நாட்டைப்பற்றி மிக மிக கவலையை தெரிவிப்பது எல்லாம் ஆளுமையை கைப்பற்றச் செய்யும் பம்மாத்து. அதனால்தான் ஆளுமை வெற்றிடமாக இருக்கிறது என்று சொல்கிறது போலி ஆளுமை. 

நூறாண்டைக் கடந்து விட்ட ஓர் இயக்கத்தின் அரசியல் பிரிவின் தலைவரை ஆளுமை இல்லை; வெற்றிடம் என்று சொல்வதற்கு மன்னில் வரலாற்று ஞானம் இருக்குமானால் அந்தக் கருத்து சொல்லப்பட்டிருக்காது. அறிவாண்மையின் வெறுமையும் நமது மெய்யியலின் தாக்கமும் போலி ஆளுமைக்கு இருக்குமானால் அது நா காத்திருக்கும். மு.க.ஸ்டாலின் கலைஞருக்கு பின் அந்த வெற்றிடத்தை நிரப்பி விட்டார். அவர் ஆளுமையோடு தமிழ் மக்கள் புடைசூழ உலா வருகிறார். நிழல்களையும் போலிகளையும் வென்றெடுக்க மேலும் நாம் மக்கள் ஆதரவை பெற வேண்டும். அதற்குரிய வகையில் கழக தலைவருக்கு பலம் சேர்ப்போம்.

நிழல் ஆளுமைகள் அதிகார மயக்கத்தில் அடிமைகளாக இருக்கின்றன. போலி ஆளுமை அண்ட் கோ இன்னும் சிஸ்டம் சரியாக வேலை செய்யவில்லை. அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? எனக் கேள்வி எழுப்பியுள்ளது. 

click me!