
முரசொலி பவள விழா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாகக் கூறியிருந்த வைகோவுக்காக இருக்கை ஒதுக்கப்பட்டிருக்க, வைகோ வருவாரா வருவாரா என்று காத்திருக்கிறார் ஸ்டாலின்.
நிகழ்ச்சி துவங்கிய நிலையில், முக்கிய அரசியல் கட்சியினர் அனைவரும் வந்திருந்தனர். ஆனால், மேடையில் போடப்பட்ட இருக்கைகளில் அனைத்தும் நிரம்பிய நிலையில், வைகோவுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கை மட்டும் காலியாகவே இருந்தது.
அடுத்து முதல் வரிசையில் போடப்பட்ட முக்கியஸ்தர்களுக்கான இருக்கைகளில், பேராசிரியரின் இருக்கையும் காலியாகவே இருந்தது. திராவிடர் கழகத் தலைவர் வீரமணிக்கு அடுத்த இருக்கை வைகோவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஸ்டாலினுக்கு அடுத்து வீரமணியும், அவருக்கு அடுத்து வைகோவும் அமர இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.
முன்னதாக, வைகோ நேற்று நீட் தேர்வுக்கு எதிராக ஸ்டாலின் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும், தாம் அதில் கலந்து கொள்ளப் போவதில்லை என்றும், முரசொலி விழாவில் அவசியம் கலந்து கொள்வேன் என்றும் கூறியிருந்தார்.
மேலும், திமுக., தலைவர் மு.கருணாநிதியின் வீட்டுக்கே சென்று அவரை நலம் விசாரித்தார். அதன் பின்னர் வைகோவின் பெயரும் இடம்பெற்ற முரசொலி பவள விழா அழைப்பிதழ் வெளியானது குறிப்பிடத் தக்கது.