
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கிற்கும் தினகரனும் சம்மந்தமே கிடையாது என ஓபிஎஸ் ஆதரவாளரான கே.பி.முனுசாமி அதிரடியாக தெரிவித்துள்ளார்.
இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு தொடர்பான வழக்கு, தேர்தல் ஆணையத்தில் நடந்து வருகிறது. இரட்டை இலை சின்ன வழக்கில் ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரங்கள் போலியானவை என தினகரன் குற்றம்சாட்டி வந்தார். தேர்தல் ஆணையத்திலும் இதையே காரணமாகக் காட்டி, தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுடன் ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்களான கே.பி.முனுசாமி, எம்பி மைத்ரேயன், மனோஜ் பாண்டியன் ஆகியோர் டெல்லியில் உள்ளனர்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான கே.பி.முனுசாமி, இரட்டை இலை வழக்கு என்பது சசிகலாவுக்கும் பன்னீர்செல்வத்துக்கும் இடையே நடந்துவரும் வழக்கு. இந்த வழக்கில் முதல்வர் பழனிசாமியும் இணைந்துள்ளார். ஆனால் தினகரனுக்கும் இந்த வழக்குக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என தெரிவித்தார்.
முதல்வர் அணியில் ஸ்லீப்பர் செல்கள் இருப்பதாக தினகரன் கூறிவரும் நிலையில், அந்த ஸ்லீப்பர் செல்களில் ஒருவர் அமைச்சர் செங்கோட்டையன் என அமைச்சர் மணிகண்டன் கருத்து தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக கே.பி.முனுசாமியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, சில விவகாரங்கள் தொடர்பாக ஊடகங்கள் கேள்வி எழுப்பும்போது என்ன பேசுவது என்று தெரியாமல் சிலர், அவசரப்பட்டு ஏதாவது கருத்தை தெரிவித்துவிட்டு பின்னர் அந்த கருத்தை வாபஸ் பெறுகின்றனர். ஜெயலலிதா எனும் ஒற்றைத் தலைமையின் கீழ் கட்டுப்பாட்டுடன் இயங்கியவர்கள் தற்போது வாய்க்கு வருவதை பேசுவதை ஒப்புக்கொண்ட முனுசாமி, விரைவில் அந்த நிலை மாறும் எனவும் தெரிவித்தார்.