
கொசஸ்தலை ஆற்றில் கமல் இறங்கியதன் மூலம் இணையவெளி அரசியலை விட்டு பொதுவெளி அரசியல் பயணத்துக்கு ஃபர்ஸ்ட் கியரை போட்டுள்ளார்.
கமலின் இந்த மூவ்-க்கு அரசியல்வாதிகள், அரசியல் விமர்சகர்கள், அரசியல் பார்வையாளர்கள், சாமான்யர்கள் என எல்லா தளங்களில் இருந்தும் வித்தியாசமான கண்ணோட்டங்களும், பின்னூட்டங்களும் வந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், எந்த முன்னறிவிப்பும் இன்றி கமல் சடாரென 28-ம் தேதி அதிகாலை களமிறங்கி ஒட்டுமொத்த தமிழக கவனத்தையும் தன் பக்கம் திருப்ப காரணம் என்ன? என்பதற்கு ஒரு புதிய பகீர் விளக்கத்தை தட்டிவிட்டுள்ளது ஒரு குரூப்.
அது இதுதான்...
“தொழில் ரீதியாக போட்டி இருந்தாலும் ரஜினியும் கமலும் நெருங்கிய நண்பர்களே! எந்த நேரத்திலும் சினிமா தொடர்பாக அவர்களுக்குள் முரண் வந்ததில்லை. உயிரைக்கொடுத்து கமல் நடித்த படங்கள் ஓடாது ஆனால் ஜஸ்ட் லைக் தட் ஆக ஸ்டைல் செய்யும் ரஜினியின் படங்கள் பிய்த்துக் கொண்டு ஓடும். ஆனாலும் ரஜினி மீது என்றுமே பொறாமை கொண்டதில்லை கமல்.
ஆனால் பல வித சூழல்களால் இன்று இரண்டு பேரும் அரசியல் களத்தினுள் அடியெடுத்து வைக்கும் சூழலில் வந்து நிற்கிறார்கள். ரஜினி அரசியலுக்கு வருவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் கமல் கிட்டத்தட்ட வந்தேவிட்டார் எனும் நிலை ஏற்பட்டுள்ளது.
நெடுங்காலமாக அரசியலை நோக்கி அடிமேல் அடி வைத்துக் கொண்டிருந்த ரஜினியை திடீரென முந்திக் கொண்டு கமல் அரசியலுக்குள் நுழைவதே பெரும் விமர்சனமாகியுள்ளது. அதாவது மாற்று மாநிலத்தை சேர்ந்த ரஜினி இங்கே முதல் இடத்தில் நின்று பிழைப்பதில் கமலுக்கு பிணக்கில்லை. ஆனால் இந்த மண்ணை ஒரு தமிழன் தான் ஆள வேண்டும் என்பதில் கமல் தெளிவாக இருக்கிறார். அதனால்தான் பல கால நட்பு விரிசல் விட்டாலும் பரவாயில்லை எனும் எண்ணத்துடன் மிக தைரியமாக ரஜினியை முந்திக் கொண்டு அரசியலில் குதிக்கிறார்.
இந்த சூழலில் திடீரென கொசஸ்தலை ஆற்றில் கமல் இறங்கியதிலும் ரஜினி விவகாரம் அடங்கியிருக்கிறது. அதாவது ரஜினியின் 2.0 படத்தின் பாடல்கள் கடந்த வெள்ளியன்று இரவில் துபாயில் வெளியிடப்பட்டன. மறுநாள் சனி காலையில் அந்த பரபரப்பு தமிழகத்தை ஆட்கொள்வதாக இருந்தது. ஆனால் இந்த சூழலில்தான் கமல் சட்டென்று சனி அதிகாலையில் களத்தில் இறங்கி புதிய அரசியலை தொடங்கியிருக்கிறார். இதன் மூலம் ஒட்டுமொத்த தமிழகமும், அரசிலரங்கமும் கமலின் பரபரப்புக்கு பின்னே ஓடத் துவங்கிவிட்டன. ரஜினியின் மெகா ப்ராஜெக்டான 2.0 ஆடியோ வெளியீடு பரபரப்பு தமிழகத்தில் எடுபடாமலே போய்விட்டது.
ஆக இதை மிக கமுக்கமாக நெற்றியடியாய் அடித்திருக்கிறார் கமல். ரஜினிக்கு இவர் கொடுத்திருக்கும் பெரிய நாக் - அவுட் இது! என்று தகவல்கள் தடதடக்கிறது.” என்கிறார்கள்.
ஆனால் கமல் தரப்போ ‘கமல் களம் கண்டதை வேண்டுமென்றே வில்லங்க கோணத்திலும், ரஜினிக்கு எதிரான கோணத்திலும் சிலர் திசை திருப்புகிறார்கள். பல நாட்களாக கொசஸ்தலை ஆறு விவகாரம் பற்றி அவர் இணையத்தில் பேசிக் கொண்டிருந்தார். சனி அதிகாலையில் சரியாக டைம் அமைந்ததால் சென்றார். அவ்வளவே!” என்று இதை மறுக்கிறது.
இந்த ரேஸ் எங்கு போய் முடியப்போகிறதோ!